அம்மாவின் வீடு - பரிசு பெற்ற சிறுகதை!

அம்மாவின் வீடு - சிறுகதை By RAJAN 

(தினமலர் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)


வேதா வழக்கத்தை விட அன்று வேகமாக வேலைகளை செய்தாள்.  சாதாரணமாக ஏழு மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் அவள் அன்று ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாள்.

சும்மாவா, இன்று அவளுக்கு ஒரு பெரிய பொறுப்பிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கப் போகிறதே! இன்று அவளுக்கு முகூர்த்த நாள் போல. ஒரு வழியாக புருஷனை சம்மதிக்க வைத்து, இன்று மாமியரை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடாகி பணமும் கட்டியாகிவிட்டது.
இனி மாமியாரின் துணியைத் துவைக்கவேண்டாம்.  அவருக்காக நேரத்துக்கு சமையல் செய்யவேண்டிய அவசியமில்லை.  அவர் குளிக்கும் போதும் கழிவறை செல்லும்போதும் கவனித்துக்கொள்ள வேண்டியதில்லை.  வேளா வேளைக்கு மருந்து கொடுக்க வேண்டியதில்லை. நினைத்தபோது மாதர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.  நினைத்த ஊர்களுக்கு சுற்றுலா போக இனி எந்த தடையும் இல்லை. பையனோடு இனி அமெரிக்கா போகலாம்.  அங்கேயே அவனுக்கு மச்சினன் மூலம் வேலை ஏற்பாடு செய்யலாம். ஏன் அவள் கூட இனி வேலைக்கும் போகலாம்.  கைநிறைய சம்பாதித்து இன்னும் பெரிய கார் வாங்கவேண்டும். இந்த காலனியிலேயே சிறிய கார் இவர்களுடையதுதான். இதனால் தன் கணவரை யாரும் அவ்வளவாக மதிப்பதில்லை என்று அவளுக்கு ஒரு எண்ணம் உண்டு.

படுக்கை அறைக்கு வந்து ரகுவை எழுப்பினாள்.

“ஏண்ணா, எழுந்திருங்கோ. இன்னிக்கு அம்மாவை ஹோம்ல சேக்கவேண்டாமா? அந்த பிரக்ஞையே இல்லாம இப்படி தூங்கிண்டிருந்தா என்ன அர்த்தம்?”

ரகு திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் வீங்கியிருந்தது.

“நான் எங்கடி தூங்கினேன்? தூக்கமே வரலை நேக்கு. ராத்திரி பூரா அம்மா நினைப்புதான். பாவம். எண்பத்தஞ்சு வருஷமா எங்களை ஆளாக்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பா தெரியுமா? இத்தனை வருஷமும் யாருக்குமே தொந்தரவு தராம அந்தப் பட்டிக்காட்டுலயே நம் பூர்வீக வீட்டிலேயே தனியாத்தானே வாழ்ந்திண்டிருந்தா? இப்பத்தானே மூணு வருஷமா வேலை செய்ய முடியாம நம்பளை அண்டிண்டிருக்கா பாவம்.  தான் சாப்பிட்டாளோ இல்லியோ, எங்களுக்கு மட்டும் வயிறார சாப்பாடு போடுவா. நிரந்தரமில்லாத வருமானம் அப்பாவுக்கு. அவர் கொண்டு வர்றதை வெச்சு எப்படியோ எங்க எல்லாரையும் கரையேத்தினா அம்மா.  தம்பி இன்னிக்கு அமெரிக்காவுல போய் செட்டிலாயிருக்கான்னா, அவனை படிக்கவைக்க என்ன கஷ்டப்பட்டா தெரியுமா? பூச்சிபோல இருக்கற அவளை ஹோம்ல கொண்டுபோய் சேக்க கஷ்டமா இருக்கு வேதா.  நாம இந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டா என்ன?”

“இங்க பாருங்கோ, முன் வெச்ச காலை பின் வெக்கக் கூடாது. எல்லாமே எல்லாரோட நன்மைக்காகவும்தானே. நாம என்ன இப்ப அம்மாவை நடுத்தெருவிலயா விடப் போறோம்? ஒரு டீசன்ட்டான ஹோம்லதானே சேக்கப் போறோம். நம்பளைவிட அவங்க ரொம்ப நல்லா பாத்துப்பாங்கங்க.  வேளாவேளைக்கு சத்தான சாப்பாடு, பேசிப்பழக இவாளைப்போலவே வயசான பெரியவா, ரெகுலரா செக்கப் பண்ண டாக்டர்ஸ், உதவி செய்ய ஆயாக்கள், இப்படி அம்மாவுக்கு எந்த குறையும் இருக்காதுங்க அங்க.”

“எல்லாம் சரி வேதா. ஆனா சொந்த பிள்ளை வீட்டில இருக்கறது எப்படி, ஹோம்ல இருக்கறது எப்படி? நமக்காகவே உழைச்சு தேய்ஞ்சு போன அம்மாவுக்கு நம்ம வீட்டில இருக்க ஒரு ஆறு அடி இடம் கூட இல்லன்னா அது அசிங்கமில்லையா? ஊர் உலகம் என்ன பேசும் சொல்லு? அம்மாவை அங்க விட்டுட்டு நம்மால இங்க வக்கனையா திங்க முடியுமா? என்னை ஏன் இப்படி பாவம் பண்ணவெக்கறே?”

“ஊர் உலகமா நமக்கு வந்து உதவி செய்ய போறது? அக்கம் பக்கத்துல கொலை விழுந்தாகூட தெரியாத சிட்டியில நாம இருக்கோம்.  நம்மளைப்பத்திதான் பேசிண்டு இருக்காளாக்கும்? இதோ பாருங்க, நான் தெளிவா சொல்லிட்டேன். மூணு வருஷமா நாம வெச்சுண்டாச்சு. இந்த மூணு வருஷமும் இந்த வீட்டில அடைஞ்சு கிடக்கேன்.  ஒரு இடத்துக்கும் போகமுடியல. என்னோட க்ளப் வேலையைக் கூட கவனிக்கமுடியலை. நம்ம பையன் படுக்க இடமில்ல. அவன் ரூம்லதான் அம்மாவை வெச்சிருக்கோம்.  அம்மாவுக்கும் ஆயுசு நீண்டுண்டே போறது.  இப்போதைக்கு போற கட்டை இல்ல இது. உங்க தம்பி புதுசா கல்யாணமாகி அமெரிக்காவுல வசதியாதானே இருக்கான்? வேணும்னா அம்மாவை அங்கே கூட்டிண்டு போய் வெச்சுக்கச் சொல்ல வேண்டியதுதானே? எனக்கு மட்டும் தலையெழுத்தா என்ன? இதோ பாருங்க, இப்போதைக்கு அம்மா ஹோம்ல இருக்கட்டும். மத்ததை அப்புறம் பாத்துக்கலாம். அதுக்குள்ள நாமலும் ஒரு ஆறு மாசம் அமெரிக்கா போய்ட்டு வந்திடலாம். அங்க போய் உங்க தம்பிக்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வரலாம். எழுந்திருங்க.”

“அம்மாவை விட அமெரிக்கா முக்கியமாடி நமக்கு? நம்பளை நம்பி ஒரு ஜீவன் இருக்கும்போது அமெரிக்காவை அப்புறம் பாத்துண்டா என்ன?”
“இப்போ நீங்க வறப்போறேளா இல்லையா? அங்க போனா நம்ம பையனுக்கும் வேலைக்கு ஏற்பாடு பண்றதா உங்க தம்பி சொல்லியிருக்கான். போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்துடலாமே!”

“நம்ம பையனோட வேலைதான் முக்கியம்னா இப்போதைக்கு அவன் மட்டும் அமெரிக்கா போகட்டுமே. நாம அப்புறமா போய்க்கறது?  எனக்கென்னவோ இது சரியா படலை.”

“ஓ.கே, அப்ப நீங்க மட்டும் இங்கேயே அம்மாவை கட்டிண்டு அழுங்கோ.  நானும் பையனும் போறோம்.”

“நான் எப்படிடி அம்மாவை தனியா வெச்சுக்கறது? வேலைக்குப் போகவேண்டாமா?”

“அப்ப அம்மாவை ஹோம்ல சேக்கறதுதான் பெஸ்ட் சாய்ஸ். எழுந்திருங்கோ”

ரகு செய்வதறியாமல் குழப்பத்துடனே எழுந்தான்.

அடுத்த அறையில் தனது படுக்கையிலிருந்து ரகுவும் வேதாவும் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கற்பகத்துக்கு மனசு வலித்தது.  அம்மா தூங்கிக்கொண்டிருப்பாள் என்று நினைத்து அவர்கள் பேசியது, இரவு பூராவும் தூங்காமல் புரண்டுகொண்டிருந்த கற்பகத்துக்கு தெளிவாகவே கேட்டது.

‘நான் ஏன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்? இந்த பகவான் இன்னமும் என் ஆயுளை ஏன் நீடிச்சுண்டிருக்கார்னு தெரியலையே’
தனக்குள்ளே நினைத்துக்கொண்டாள்.

‘ஆச்சு. இன்றோடு இந்த சுகமான படுக்கையும், பிள்ளையின் வீட்டுவாசமும் முடியப் போகிறது. ஏதோ நம் கண் முன்னே பிள்ளையும் அவன் குடும்பமும் நன்றாக வாழ்ந்துகொண்டிருந்ததை இத்தனை நாளாய் கண் குளிற பார்த்துக்கொண்டிருந்தோம். இனி இது சாத்தியமில்லை. இனி யார் கூடவோ, யார் தயவையோ எதிர்பார்த்து வாழப் பழகவேண்டும்.  இனி அன்பையும் காசு கொடுத்து முதியோர் இல்லத்தில் வாங்கவேண்டிய கட்டத்துக்கு வந்தாயிற்று.  அவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பணியாளுக்கு பலபேரிடம் அன்பு காட்டவேண்டிய கட்டாயம். என்ன இருந்தாலும் வீடு வீடுதான், விடுதி விடுதிதான்.  இதைத்தவிர்ப்பது என் கையில் இல்லை. உடம்பில் தெம்பு இருக்கும் வரைதான் யாருக்குமே தன் விருப்பப்படி வாழமுடியும்.  தெம்பு போனால், கஷ்டம்தான்.  ஒவ்வொரு மனுஷனும் தன் வேலையைத் தானே செய்துகொள்ளும் வரை மட்டுமே உயிரோடிருக்கவேண்டும்.  முடியாமல் போகும்போது ‘சீக்கிரமே கொண்டுபோய்விடு’ என்று கடவுளிடம் பிரார்த்தித்துக்கொண்டே பிள்ளைகள் அமைத்துத்தரும் சூழ்நிலையில் வாழவேண்டும்.  ஹ¨ம்...நடப்பது நடக்கட்டும். எல்லாம் பகவான் விட்ட வழி’

மெல்ல எழுந்து படுக்கையிலேயே உட்கார்ந்தாள். இப்போதெல்லாம் எழுந்து உட்காருவதுகூட கஷ்டமாகத்தான் இருக்கிறது. தூங்கி எழுந்ததும் காலை பத்து மணி வரை படபடப்பாகவே இருக்கிறது. அதுவும், இன்று முதியோர் இல்லத்துக்குப் போகவேண்டும் என்ற போது ராத்திரி பூராவும் தூக்கமே இல்லாமல் தன் நீளும் ஆயுளை நினைத்தே நொந்துகொண்டு படுத்திருந்ததில், படபடப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் கற்பகத்திடம் ஒரு நல்ல குணம் உண்டு.  பெரும்பாலான பெரியவர்களிடம் இருப்பதுதான் அது. தன் தனிப்பட்ட விருப்பங்களைத் தியாகம் செய்து பிள்ளைகளின் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்கள் எடுக்கும் முடிவுகளை முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வதுதான் அது. தன் விருப்பத்தைக் கூறி அதனால் பிள்ளைக்கு எதேனும் சங்கடங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக பிள்ளை என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வாள் அவள்.

காபி வருவதற்காக காத்திருந்தாள்.  அனேகமாக இதுதான் பிள்ளை வீட்டில் தான் குடிக்கும் கடைசி காபியாகக் கூட இருக்கலாம்.  முதியோர் இல்லத்தில் காபியோ, பாலோ,  அதுவும் ஃபில்டர் காபியோ இன்ஸ்டன்ட் காபியோ தெரியாது.  அவள் ஃபில்டர் காபி தவிர வேறு எதுவும் குடித்ததில்லை.

வேதா கையில் காபி டம்ளருடன் வந்தாள். முகத்தில் வழக்கத்தை விட புன்னகை அதிகமாக இருந்தது.

“அம்மா, இந்தாங்கோ காபி. குடிச்சுட்டு குளிக்க ரெடியாகுங்கோ. பத்து மணிக்கு ஹோமுக்கு கிளம்பணும்.”

அம்மா இயலாமையோடு மருமகளைப் பார்த்தாள்.

“ஏம்மா, பத்து மணிங்கறது ஒரு பண்ணெண்டு மணிக்கு கிளம்ப முடியாதா? என்னமோ தெரியலை, படபடப்பு அதிகமா இருக்கு.”

வேதாவுக்கு பயம் வந்துவிட்டது. எங்கே இந்த கிழவி உடம்பு முடியலை என்று சொல்லி ஹோமுக்குப் போவதை தவிர்த்துவிடுவாளோ என்று பயந்தாள். இந்த வாய்ப்பை விட்டால் பிறகு, புருஷனை மீண்டும் ஒப்புக்கொள்ளவைப்பது சிரமம் என நினைத்தாள். அப்புறம் அமெரிக்காவாவது ஐரோப்பாவாவது.

“இல்லம்மா...அந்த ஹோமோட ஓனர் இந்த நேரத்துக்குத்தான் அப்பாயிண்ட்மென்ட் குடுத்திருக்கா. அட்மிட் பண்ணும்போது அவா நேரடியா பாத்துட்டுதான் அட்மிட் பண்ணுவாளாம்.  அதனால, பத்து மணிக்கு கிளம்பினாத்தான் பத்தரைக்கு அங்கே போகமுடியும்.  நான் ஹெல்ப் பண்றேன். மெதுவா குளிச்சுட்டு கிளம்பலாம்”

அம்மா எச்சிலை விழுங்கிக்கொண்டு சொன்னாள்:  “சரிம்மா, அப்படியே ஆகட்டும்”

அம்மாவுக்கு நெஞ்சை அடைத்தது. சிந்தனைகளும் பலவாறாக ஓடியது.  ‘இந்த வீட்டில் நான் சாகும்வரை இருக்க எனக்கு தகுதியில்லையா? எண்பத்தெட்டு வயசாகியும் இன்னும் வாழ்வது என் குற்றமா? இவ்வளவு பெரிய உலகத்தில், இவ்வளவு விபரமரிந்த மனிதர்கள் இடையில் வாழ சிறப்புத்தகுதி ஏதும் வேண்டுமா? முழு ஆரோக்கியத்துடன் இரண்டு பிள்ளைகளைப் பெற்று, கடுமையான பண நெருக்கடிகளுக்கிடையேயும் யார் வீட்டிலும் போய் அவர்களை காசுக்காகவும், சாப்பாட்டுக்காகவும் நிற்கவிடாமல், இப்படிப் புரட்டி, அப்படிப் புரட்டி, ஏதேதோ செய்து சமாளித்து படிக்கவைத்து, நாலுபேர் பாராட்டும் விதமாக குடும்பத்தை ஆளாக்கிய பிறகும், கடைசி காலத்தில் பிள்ளைகளுடன் காலம் தள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே!  என் கணவர் பென்ஷன் கிடைக்காத வேலை செய்ததும், நான் வேலைக்குப் போகாத குடும்பத்தலைவியாக வீட்டை திறமையாக கவனித்ததும் எங்கள் தவறா? ஒருவேளை எனக்கு மாதம் பத்தாயிரமோ, பதினஞ்சாயிரமோ பென்ஷன் வந்திருந்தால் நான் முதியோர் இல்லத்துக்குப் போகத் தேவையில்லாமல் போயிருந்திருக்குமோ?  வருமானமோ, சொத்தோ இல்லையென்றால் வயசான காலத்தில் காலம் தள்ள முடியாதா? சரி, வயசானவான்னா அமெரிக்காவுக்கு கூட்டிண்டு போகக்கூடாதுன்னு ஏதும் இருக்கா?  பெரிய பெரிய அரசியல் தலைவர்லாம் வயசான காலத்துலயும் உலகம் பூரா சுத்தறாளே.  சரி, அதெல்லாம் இருக்கப்பட்டவா விஷயம். நான் ஒரு ஆதாயமில்லாத கிழம்தானே.  பாவம், ரகுதான் என்ன பண்ணுவான்? என்னை கவனிப்பானா, இல்லை அவன் குடும்பத்தை கவனிப்பானா? எல்லாம் விதிப்படி நடக்கட்டும். பகவான் விட்ட வழி’.

அம்மா இயலாமையினூடே மருமகள் தந்த காபியை உறிஞ்சினாள். ஏனோ அது இன்று இறங்காமல் தொண்டையை அடைத்தது. ஒருவழியாக குடித்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து குளித்தாள். வெளியே வந்து நெற்றியில் சின்னதாக விபூதியை இட்டுக்கொண்டாள்.  அதுதான் அவளது தினசரி வழக்கம். எப்போதும் நெற்றியில் திருநீறுடன் இருப்பது அவளின் வழக்கம். இத்தனை வயதிலும் சுத்தமாக இருப்பதில் ரொம்பவே கவனமாக இருப்பாள்.

ரகு வந்து அம்மா அருகில் நின்றான். அவனுக்கு எதுவும் சொல்ல வாய் வரவில்லை. அமைதியாக அம்மாவின் தலைமுடியைக் கோதிவிட்டான். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா, ஏதும் நினைச்சிக்காதே. கொஞ்ச நாள்தான்.  திரும்பவும் கூட்டிண்டு வந்துடலாம். கவலைப்படாம தைரியமா இரு. உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை. இப்ப அவசியமா நந்துவோட வேலை விஷயமா அமெரிக்கா போகவேண்டியிருக்கு. வந்ததும்.....”

ரகு தயங்கித் தயங்கி கூறியபோது, அம்மா அவன் வாயைப் பொத்தினாள்:

“அதெல்லாம் இல்லடா ரகு. விதிப்படி எல்லாம் நடக்கும். உங்க வேலைகளையெல்லாம் நல்லபடியா முடிங்கோ. அப்பா நினைப்போடவும், பகவானோட நாமத்தைச் சொல்லிண்டும் நான் எங்கவேணாலும் இருந்துப்பேன். கார் வந்துடுத்தா?”

“வந்துடுத்தும்மா. வா, மெதுவா போகலாம். உன் குச்சியை நல்லா பிடிச்சுண்டு நட”

காரில் ஏறியபோது, தான் மூன்று வருடம் தங்கியிருந்த வீட்டை ஒருமுறை அம்மா மீண்டும் திரும்பிப் பார்த்துக்கொண்டாள்.   சூழ்நிலை தெரிந்ததுபோல், “உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்......உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்” என்ற கண்ணதாசன் பாடல் காரிலிருந்த எஃப்.எம் ரேடியோவில் ஒலித்தது.

அடுத்த முப்பது நிமிடத்தில் வந்துவிட்டது கார்.  அந்த முதியோர் இல்லம் முழுவதும் எங்கே பார்த்தாலும் வயதானவர்கள் இங்கேயும் அங்கேயுமாய் குச்சியுடன் நடந்துகொண்டிருந்ததை கற்பகம் பார்த்தாள். ஒவ்வொருவருக்கும் பின்னால் என்னென்ன கதைகளோ.  அதையெல்லாம் கேட்டுக்கொண்டே காலத்தை ஓட்டவேண்டியதுதான். அங்கேயே சின்னதாய் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. மானசீகமாய் வணங்கிக்கொண்டாள்.

சேர்க்கை நடைமுறைகள் முடிந்ததும் அம்மாவை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.  அந்த அறையில் அம்மாவுடன் தங்க மேலும் இரு வயதான பெண்கள் இருந்தனர்.  அம்மாவின் துணிமணிகளை வைத்துக்கொள்ள ஒரு பீரோவும் இருந்தது. நான்கு அறைக்கு ஒருவர் என பெண் ஊழியர்கள் இருந்தார்கள்.  தினமும் குளிப்பாட்டி விடவும், சாப்பாடு எடுத்து வரவும், உடை மாற்ற உதவவும் நியமிக்கப்பட்டிருந்தவர்கள் அவர்கள்.

அம்மா அவளுக்காக அளிக்கப்பட்ட படுக்கையில் அமர்ந்தாள். படபடப்பு மேலும் அதிகமாகவே இருந்தது.

ரகுவும் வேதாவும் சிறிது நேரம் ரொம்பவே பாசமாகப் பேசிவிட்டு விடைபெற்றார்கள். ரகுவின் கண்கள் வீங்கியிருந்ததையும், “அழப்போகிறேன்” என்று கூறுவதுபோல் உதடு லேசாக பிதுக்கிக்கொண்டிருந்ததையும் அம்மா கவனித்தாள்.

“ரெண்டு பேரும் நிம்மதியா போய் உங்க வேலையைக் கவனிங்கோ. இங்கதான் எனக்கு நிறைய துணை இருக்காளே.  அமெரிக்கா போனா, சுந்தரை அம்மா ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்கோ. எல்லாருக்கும் என் ஆசீர்வாதம்.”

அம்மா அப்படியே மெல்ல கட்டிலில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

வீடு திரும்பியதும் ரகு அம்மா இருந்த அறைக்குப்போய் பார்த்தான்.  சூனியமாகத் தோன்றியது அவனுக்கு.  அவன் மனதை குற்ற உணர்வு பிடுங்கித் தின்றது. ‘அமெரிக்காவுக்கு நம் பிள்ளை நந்து மட்டும் போனால் போதாதா? அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு எல்லாரும் போய்த்தான் ஆகவேண்டுமா? இவளுக்கு ஏன் இந்த பிடிவாதம்? நான் அமெரிக்காவிலும் அம்மா முதியோர் இல்லத்திலுமா? பெற்றவர் பாதிக்கப்படாமல் உருப்படுவதற்கு இந்த உலகில் வழிகளா இல்லை? பெற்றவரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு சம்பாதிப்பதில் அப்படி என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?  அப்படிச் செய்பவர்களையும் கூட வசதியை வைத்து “சமர்த்து” என்று இந்த விவஸ்தை கெட்ட உலகம் கொண்டாடுகிறதே!  பகவானே, என்ன போலித்தனமான வாழ்க்கை வேண்டிக்கிடக்கிறது? கல்யாணம் ஆகிவிட்டால் தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையை விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டுமா? தான், தன் மனைவி, தன் பிள்ளைக்காக மட்டுமே வாழ்வதுதான் குடும்ப வாழ்க்கையா? பெற்றோரும், உடன் பிறந்தாரும் சுமைதானா?’

“நகருங்கோ” என்றபடி வேதா வந்து அவன் சிந்தனையைக் கலைத்தாள்.

“என்னடி வாளித்தண்ணியோட வந்திருக்க?”

“க்கும், ரூமெல்லாம் கழுவிவிடவேண்டாமா? முதல்ல இந்த படுக்கையை வாஷிங் மிஷின்ல போட்டு துவைக்கனும்.  அம்மா சில சமயம் படுக்கையிலேயே யூரின் போயிருக்கா. இந்த ரூமையும் படுக்கையையும் சுத்தம் பண்ணி நம்ம பையனுக்குக் குடுக்கணும். அவன் பாவம் தினமும் பால்கனியில தூங்கறான்”

“அதை அட்லீஸ்ட் நாளைக்காவது செய்யலாமில்லையா? அம்மா ஹோமுக்குப் போயி ரெண்டு நாழி கூட ஆகலை. அதுக்குள்ள யாராவது இப்படி சுத்தம் செய்வாளா?”

“சும்மா இருங்கோ. இப்ப சுத்தம் பண்ணினால்தான் ராத்திரிக்குக் காய்ஞ்சிருக்கும்.”

வேதாவிடம் விறுவிறுப்பு அதிகமாகவே இருந்தது.  மாமியார் இல்லாத குற்ற உணர்வே இல்லை அவளிடம். தன் பிள்ளைக்கு படுக்கையை சரிசெய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். விரைவில் அமெரிக்கா போகப் போகிற பிள்ளை.  கடைசி காலத்தில் தங்களை வைத்துக்கொள்ளாமல் போய்விட்டால்? அதனால், அவனுக்காக விழுந்து விழுந்து வசதி செய்தாள் அவள். அதனாலேயே பிள்ளையை மட்டும் அனுப்பாமல் அவளும் அமெரிக்கா புறப்படுகிறாள்.

வேதா மாலையில் சூடாக வெங்காய பஜ்ஜி செய்திருந்தாள்.  அம்மாவுக்கு மிகவும் பிடித்தது இது. ரகுவுக்கு ஒரு பஜ்ஜி கூட வாய்க்குக் கீழே இறங்கவில்லை.  பாவம் அம்மா, இதை இவள் நேற்றே செய்திருக்கக் கூடாதா? தனக்கு சுதந்திரம் கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக சந்தோஷமான மனநிலையில் இன்று செய்திருக்கிறாள்.

இரவு ரகு எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை.  பால்கனியில் நின்று சாலையில் இங்கும் அங்கும் எதையோ சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களைப் பார்த்தபோது அவனுக்கு அயற்சியாக இருந்தது.  இந்த கலிகாலத்தில் மனிதர்களின் உணர்வுகளை விட, பொருள் சேர்க்கும் அவசியமும் அவசரமுமே பிரதானமாகப் போய்விட்டது பெரும்பாலான மக்களுக்கு என்று நினைத்துக் கொண்டான்.

இரவு பத்து மணி.

“வாங்க படுக்கப் போலாம்” என்றபடியே வேதா வந்தாள்.

“நீ போய் படு. எனக்கு தூக்கம் வரலை. அம்மா பாவம், அங்கே புது இடத்துல தூங்கறாளோ என்னவோ. அதை நினைச்சாலே, நெஞ்சை அடைக்கிறது.”

“எல்லாம் நாலு நாள்லே பழகிப்பா. எத்தனை பேர் அங்கே இருக்கா?  அம்மாவுக்கு பொழுது போறதே தெரியாது பாருங்கோ.  வாங்க தூங்கலாம்.”

படுக்கைக்கு போனான். அன்று வேதா புதுப்பெண் போல இரவில் பவுடரெல்லாம் அடித்துக்கொண்டு தெரிந்தாள். அவள் முகத்தில் தெளிவு புதிதாகத் தெரிந்தது.  அவளின் அணைப்பு அவனுக்கு ஏனோ அன்னியமாய்த் தோன்றியது.

அந்த பத்து மணிக்கு திடீரென அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம்.

“இந்த நேரத்துல யார் மணி அடிக்கறது?” என்று சொன்னபடியே கதவைத் திறந்தான் ரகு.

அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டிற்கு வெளியே நான்கு பெண்மனிகள் நின்றிருக்க அவர்களின் நடுவே ஸ்ட்ரெட்சரில் தரையில் கிடத்திய நிலையில் அம்மா.

“அம்மாவுக்கு என்ன ஆச்சு?”  அலறினான் ரகு.  சத்தம் கேட்டு

ஓடோடிவந்தாள் வேதா.

அவர்களில் ஒரு பெண்மனி பேசினாள்:

“ஸாரி சார். நாங்க முதியோர் இல்லத்திலருந்து வர்றோம். உங்க அம்மா நீங்க விட்டுட்டுப் போனதிலிருந்தே யார்கிட்டேயும் பேசலை.  ஏதோ சிந்தனையிலேயே இருந்தாங்க.  வாய் மட்டும் ஏதோ மந்திரங்களைச் சொல்லிகிட்டே இருந்தது.  ராத்திரி சாப்பிடறதுக்காக தோசையை குடுத்து சாப்பிடச் சொன்னோம். முதல்ல வேண்டாம்னு சொன்னாங்க.  நாங்க வற்புறுத்தினதால, ஒரே ஒரு துண்டு எடுத்து வாயில போட்டாங்க. என்னன்னு தெரியலை, தோசை உள்ளே இறங்கலை. அப்படியே நெஞ்சு அடைச்சு இறந்துட்டாங்க.  நம்ம ஹோம் டாக்டர்தான் இவங்க இறந்துட்டதா உறுதிப்படுத்துனாங்க.  அதுதான் உடனே உங்க வீட்டுக்கு கொண்டு வந்திருக்கோம்.  வி ஆர் வெரி ஸாரி ஃபர் திஸ்.”

“அம்மா” என்று ரகு அலறிய அலறலில் அந்த காலானியே வாசலில் கூடியது.  வேதாவாலும் அழுகையை அடக்க முடியவில்லை.  ரகுவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

“அம்மா, உன் வஞ்சனை இல்லாத மனசு தெரியாம உன்னை நானே கொன்னுட்டேனேம்மா” என்றபடியே அம்மாவின் உடம்பின் மீது விழுந்து அழுதான்.

அம்மாவின் உடல் உள்ளே கொண்டுவரப்பட்டது.  கழுவிச் சுத்தமாயிருந்த அவளின் அறையில் அவள் ஏற்கனவே படுத்திருந்த அதே கட்டிலில் உடல் வைக்கப்பட்டது.

கிடக்கும் அம்மாவின் முகத்தில் அசாத்திய அமைதி. நிரந்தர அமைதி. எண்பத்தெட்டு ஆண்டுகளாக குடும்பமே கோவில், பிள்ளைகளே உலகம் என்று உழைத்துத் தேய்ந்திருந்த அந்த ஜீவனுக்கு தன் கடைசி மூச்சை பிள்ளையின் வீட்டில் விடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு நிறைவேறாத ஏக்கம் தெரிவதை ரகுவால் உணர முடிந்தது. வயதானவர்கள் குழந்தைகள் மாதிரி. அவர்களுக்கு காசு, பணம் முக்கியமில்லை. பிள்ளைகளிடமிருந்து வரும் அன்பான வார்த்தைகளும்,  பிள்ளைகளோடு அமைதியாக வாழும் வாய்ப்பும், கனிவோடு தரப்படும் சிறிதளவு உணவும் மட்டும் போதும் அவர்களுக்கு.

எதுவுமே செய்ய முடியாத இயலாமையிலேயே அம்மா வீட்டிலிருந்து முதியோர் இல்லத்துக்குக் கிளம்பியிருக்கவேண்டும் என்று தோன்றியது ரகுவுக்கு.

பிள்ளைகள் மேல் எந்த அளவு நம்பிக்கையும், பாசமும் இருந்திருந்தால், கொண்டுவிட்ட எட்டு மணி நேரத்திலேயே அம்மா நெஞ்சு அடைத்து உயிரை விட்டிருக்கவேண்டும்?

அடக்கமுடியாத கண்ணீருடன் ரகு அம்மாவின் வஞ்சனையற்ற முகத்தைப் பார்த்தான்.

“இனிமே என்னால் யாருக்கும் எந்த சங்கடங்களும் இருக்காதுப்பா. அவா அவா என்னென்ன ப்ளான் வெச்சிருக்கேளோ அதுப்படி நிம்மதியா இனிமே செய்யலாம்”  என்று ரகுவுக்குச் சொல்வதுபோல் இருந்தது அம்மாவின் முகம்.

மாமியாரின் முகத்தைப் பார்த்தபோது வேதாவுக்கும் ஏனோ குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது.

“நாளைக்கு என் உடம்பை தகனம் செஞ்சதும் ஒரேடியா வீட்டையே கழுவிக்கலாம் வேதா. அப்புறம் இந்த ரூம் உன் பிள்ளைக்கு மட்டும்தான். நீயும் நிம்மதியா அமெரிக்கா போகலாம்”  என்று மாமியார் சொல்வதுபோல் பட்டது வேதாவுக்கு.

கருத்துகள்

POPULAR IN THIS SITE