மோடி அலையை தமிழகத்தில் தடுத்தது எது?

மோடி அலையை தமிழகத்தில் தடுத்தது எது?


(ராஜன், எழுத்தாளர், ADMIN)

இந்தியா முழுதும் மோடி அலை வீச, தமிழகத்தில் மட்டும் பா.ஜ.க வுக்கு ஓட்டுகள் விழாதது ஆச்சரியத்தைத் தந்தது. மோடி அலை தமிழகத்தில் நுழையாமல் தடுத்த காரணிகள் எவை என யோசித்துப் பார்த்ததில் சில விஷயங்கள் தோன்றின.

(1) முதலில் அ.தி.மு.கவை எடுத்துக் கொள்வோம். ஜெ. இருந்த வரை, அ.தி.மு.க ஒரு இரும்புக் கோட்டையாகவே இருந்தது. அ.தி.மு.கவின் மதிப்பு சிம்மாசனத்தில் இருந்தது.

அதன் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் பாதுகாக்க, பன்னீர்செல்வம் குழுவினரும் எடப்பாடியுடன் சேர, இன்றுவரை தொடர்கிறது ஆட்சி. இடையில், அ.தி.மு.கவில் இருந்து சசிகலா குடும்பம் வெளியேற்றப் பட, 18 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு தினகரன் பூச்சாண்டி காட்டிய குடைச்சல்களை எடப்பாடி, பன்னீர் கூட்டணி சாமர்த்தியமாக சமாளித்தது. அதற்கு துணையாக மோடியுடனும் நல்ல உறவை வளர்த்துக் கொண்டு புது ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

தி.மு.கவும் பிளவுகளை சந்தித்த கட்சிதான் என்றாலும், அ.தி.மு.க ஏதோ தன் கட்சி உட்பட உலகமே சந்தித்திராத குழப்பத்தில் இருப்பது போல மக்களிடையே ஒரு பிம்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியது தி.மு.க.
இப்படி அ.தி.மு.கவின் இமேஜை ஊதிப் பெரிதாக்கி தி.மு.க டேமேஜ் செய்தது அ.தி.மு.கவின் தோல்விக்கு முதல் காரணம்.

(2) இரண்டாவதாக, ஜி.எஸ்.டி உட்பட அரசின் வரி சீர்திருத்த நடவடிக்கை, வங்கிகளுக்கு மக்களை வரச் செய்ய, வரவு, செலவுகளை சட்ட பூர்வமாக கணக்கில் காட்ட மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எளியோருக்கும் தொழில் செய்ய கடன் கிடைக்க அவர் தந்த முத்ரா திட்டம், குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான கடன் வட்டி மானியம், போன்ற முயற்சிகளை ஆதரித்து இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையே கூட முழுமையாக வாக்களித்த போது, தமிழ்நாட்டில் மட்டும் அவற்றுக்கு எதிர்மறை சாயம் பூசி தி.மு.க தீவிரமாக எதிர் பிரசாரம் செய்து மக்களை நம்ப வைத்தது. மக்களும் அந்த எதிர்மறை பிரசாரங்களை நம்பி பா.ஜ.கவுக்கும் அதற்குத் துணையாக இருந்த அ.தி.மு.கவுக்கும் எதிராக ஓட்டளித்தார்கள் என்பதும் ஒரு காரணம்.

(3) ஜெ. மறைந்ததும், 18 எம்.எல்.ஏக்களும், தினகரனும் தங்களை வளர்த்த கட்சிக்கு எதிராக திரும்பத் திரும்ப கொடுத்த பேட்டிகள், கவிழ்ப்போம் என்ற மிரட்டல்கள் போன்றவை மக்களிடையே அ.தி.மு.க பற்றிய எதிர்மறை கருத்தை உருவாக்கிக் கொண்டு இருக்க, இங்கே எடப்பாடியும், பன்னீரும் அமைதியாக கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற மிக திறமையாக செயல்பட்டும், அவர்களிடம் தினகரன், ஸ்டாலின் போன்றவர்களிடம் இருந்த ஆர்ப்பாட்டம் நிறைந்த அணுகுமுறை இல்லாமல் நாகரீகமாக நடந்து கொண்டதும், மக்களிடம் நல்ல தாக்கத்தை உருவாக்க முடியாமல் போனது. நம் மக்களுக்கு நாகரீகமாக நடந்து கொண்டால் சுவாரசியமாக இருக்காத அளவு கட்சிகளும், 24 மணி நேர ஊடகங்களும் அவர்களை பழக்கப் படுத்தியிருந்தன. எடப்பாடி, பன்னீரின் நாகரீகமான பேட்டிகளை விட, ஸ்டாலின், தினகரனின் அதிரடி ஆர்ப்பாட்ட அறிவிப்புகள் மக்களிடையே சென்று சேர்ந்தன. அ.தி.மு.கவுக்கு கிடைத்த இந்த ஆர்ப்பாட்டமான எதிர்மறை விளம்பரம், தி.மு.கவுக்கு சாதகமாகப் போனது.

|(4) அடுத்ததாக நீட் தேர்வு இந்தியா முழுதும் எதிர்ப்பு இல்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்க, தமிழ்நாட்டில் அதற்காக செய்யப் பட்ட எதிர்மறை பிரசாரம் கடுமையானது. பிற கட்சிகளால் செய்யப் பட்ட எதிர்மறை விமரிசனங்கள் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவின் இமேஜை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைத்தன. நீட் தேர்வு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டம் என்பதை தி.மு.கவும், பிற எதிர்க்கட்சிகளும் இலகுவாக மறைத்து விட்டன.

(5) அதேபோல கூடங்குளம், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற பிரச்னைகளில் எடப்பாடி அரசின் மீது எராளமாய் தூற்றுதல்கள் மற்றும்  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் சம்பள உயர்வு, கூடுதல் பென்ஷன் கேட்டு திரும்பத் திரும்ப நடத்திய வேலை நிறுத்தங்கள், அவர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் ஆவேச பேச்சுக்கள் போன்றவை, எடப்பாடி மற்றும் மோடி பெயரை தமிழகத்தில் வெற்றிகரமாய் டேமேஜ் செய்தன. மக்களும் ஒரு திட்டத்தை தேவையா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்கத் தயாரில்லை. பலர் ஒன்றைக் கூறினால் அது உண்மை என நம்பினார்கள்.

(6) இந்தியா முழுதும் உள்ள மக்கள் மோடியின் நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் போது, தமிழ்நாடு மட்டும் எதிர்க் கட்சிகளின் இத்தகைய திட்டமிட்ட எதிர்மறை பிரசாரங்களால் தூண்டப் பட்டு அளித்த வாக்குகளால் தமிழ்நாட்டுக்கு பெரிதாக எந்த நன்மையும் கிட்டப் போவதில்லை. மாநிலத்திலும் மத்தியிலும் பழைய ஆட்சிகளே தொடர்கின்றன. எனவே மக்கள் எதிர்மறை பிரசாரங்களை நம்பி மாற்றி அளித்த வாக்குகள் அவர்களுக்கு முழுப் பயன் அளிக்காமல் போகக் கூடும் நிலை இப்போது.

(7) கட்சி ஊடகங்கள் சசிகலா குடும்ப வசம் போனதால் எடப்பாடி அரசால் தன்னுடைய திட்டங்களை மக்களிடையே அவர்கள் விரும்பிய படி கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக அவர்களின் தொலைக் காட்சி தவிர சன் தொலைக் காட்சியும் நேர்மறை செய்திகள் தந்து உதவியது. கடைசி சில மாதங்களில் ஆளும் கட்சி தனக்காக ஒரு செய்தி தொலைக்காட்சியும், தினசரி பத்திரிகையும் துவக்கினார்கள். ஆனால் அவை இன்னும் முழுமையாக மக்களிடம் போய் சேரவில்லை.

(8) கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மதக் கலவரம் கூட நடந்ததில்லை எனினும், பா.ஜ.க மீது ‘சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி’ என்ற கருத்து தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க் கட்சிகளால், திரும்பத் திரும்ப உறக்கக் கூறப் பட்டது. இதுவும் பா.ஜ.க, அ.தி.மு.கவின் பின்னடைவுக்கு காரணம்.

(9) தவிர, சில தொகுதிகளில் அ.தி.மு.க, அ. ம.மு.க மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் விழுந்த ஓட்டுகளை கூட்டிப் பார்த்தால் அது தி.மு.க பெற்ற ஓட்டுகளை விட அதிகம் வருகிறது. எனவே இந்த இரண்டு புதிய கட்சிகள் அ.தி.மு.கவின் ஓட்டுகளை பிரித்ததும் சில தொகுதிகளை அது இழக்கக் காரணம். விஜயகாந்தின் தேமுதிக ஆரம்பத்தில் பெற்ற ஓட்டுகளை விட கமல் மற்றும் தினகரனின் கட்சிகள் மிகவும் குறைவாகவே பெற்றிருந்தாலும் அ.தி.மு.கவின் 5-6 சதவீத  ஓட்டுக்களையாவது அந்த இரு கட்சிகள் பிரித்திருக்கக் கூடும்.

உதாரணமாக, கீழ்கண்ட தொகுதிகளில் இந்த 3 சிறு கட்சிகள் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி தோற்கச் செய்தன:

சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகள்:

திருப்போரூர், ஓசூர், தஞ்சாவூர், பெரியகுளம் (தனி), ஆண்டிப்பட்டி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய ஏழு தொகுதிகள்.
பாராளுமன்றத் தொகுதிகள்:

தர்மபுரி, சேலம், திருப்பூர், கோவை, சிதம்பரம் (தனி), மதுரை, விருது நகர், ராமநாதபுரம் ஆகிய எட்டு தொகுதிகள்.

இப்படி, அ.தி.மு.க மீது பிற கட்சிகள் எற்படுத்திய சந்தேக மற்றும் குழப்ப அலையில் பல ஆயிரம் ஓட்டுகள் இந்த சிறு கட்சிகளுக்கு போய்விட்டன. இந்த மூன்று சிறு கட்சிகள் அ.தி.மு.கவின் ஓட்டுகளை பிரித்திருக்கவில்லை என்றால், அ.தி.மு.க கூட்டணிக்கு மேலும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும், எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் கூடுதலாகக் கிடைத்திருக்கும்.
இப்படி கட்சிக்குள் பிளவு,  எதிர்மறை பிரச்சாரங்கள், வலுவான தலைவி இல்லாமல் போனது என்று இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், எடப்பாடி அரசு, ரேஷன் பொருட்களை வழங்குவதில் நன்றாகவே செயல்பட்டது. அருமையான பருப்பு, போதுமான அரிசி தடையின்றி வழங்கப் பட்டது. தடையில்லா மின்சாரம் வழங்கப் பட்டது. அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டன. கலவரங்கள் இன்றி மாநிலம் அமைதியாக இருந்தது.

எப்படியோ, எடப்பாடியும் பன்னீரும், பல பிரச்னைகளை திறமையாக சமாளித்த போதிலும், தி.மு.க ஆட்சியில் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி திட்டித் தீர்த்ததை மக்கள் ஏழே வருடத்தில  மறந்துவிட்டு மீண்டும் அதற்கே வாக்களித்தார்கள் என்றால் அரசியலில் தமிழ்நாட்டு மக்கள் தீர யோசித்து வாக்களிப்பது இல்லை என்பதையும், எதையும் சுலபமாக மறந்து விடுபவர்கள் நம் மக்கள் என்ற கசப்பான உண்மையையும் மக்களின் இந்த மறதியை நம்பியே தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் உள்ளன என்பதையும் நாம் புரிந்து  கொள்ளலாம். இது தவிர, பணம் அதிகம் யார் தருகிறார்கள் என பார்த்து ஒரு கட்சியின் ஆட்சி அவலங்களை எளிதில் மறந்து, அதிகம் கொடுத்த கட்சிக்கு விசுவாசமாக (!!) வாக்களித்து விடுகிறார்கள் என்பதையும்  நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படி அ.தி.மு.க ஏகப்பட்ட பிரச்னையில் இருக்கும் நேரத்தில், தனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலம் அ.தி.மு.க பற்றியும், பா.ஜ.க பற்றியும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை வெற்றிகரமாக ஸ்டாலின் திருப்பி விட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில், இதே மக்கள் அப்படியே மாற்றி பட்டனை அழுத்தவும் தயங்க மாட்டார்கள். ஏனென்றால், அட, நம் மக்களுக்கு நிரந்தர கொள்கையே இல்லை என்பது கசப்பான உண்மை.

மோடி மிகச் சிறந்த பேச்சாளர்தான். ஆனால் அது ஹிந்தியில். நம் மக்கள் ஹிந்தியை கற்க முடியாதவாறு கட்சிகள் நெடுங்காலமாக தடுத்து வைத்துள்ள நிலையில்,  மோடி அலை தமிழகத்தில் நுழைய வேண்டுமானால், அவர் சிறிதளவு தமிழ் கற்று அடிக்கடி தமிழகம்  வந்து 5 நிமிடமாவது ஆவேசமாக அவர்கள் மொழியில், தமிழில் பேச வேண்டும். பா.ஜ.கவினர் ஆவேசமாக எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அவர்களைப் போலவே மேடையில் தாக்கிப் பேசத் துவங்க வேண்டும். ஓரிரு சினிமா ஹீரோக்களை கட்சியில் பிடித்துப் போட வேண்டும். அவர்களை மக்களிடம் பேசச் சொல்ல வேண்டும்.

ரஜினி - கமல் கூட்டணி நடைமுறைக்கு ஒத்து வராதது. தலைமைப் பதவி பற்றிப் பேச்சு வரும் போது ரஜினி - கமல் கூட்டணி உடையும். என்றுமே முதன்மையாக இருக்கவேண்டும் என விரும்புபவர் கமல். அவர் தன் இடத்தை என்றுமே ரஜினிக்கு விட்டுத் தர மாட்டார். எனவே, நாத்திக நண்பரான கமலுடன் ரஜினி சேருவதற்குப் பதிலாக, ஆத்திக நண்பரான மோடியுடன் அவர் கை கோர்க்க வேண்டும். தன் தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றால், தான் தான் முதல்வர் என்ற உத்தரவாதத்தைப் பெற்று, ரஜினி பா.ஜ.கவில் இணைய வேண்டும்.

மோடி-ரஜினி கூட்டணிதான் இயல்பானதாக இருக்கும். கங்கா-காவிரி இணைப்பு போல ரஜினி-மோடி இணைவு, தமிழகத்திலும் மோடி அலை நுழைய கதவைத் திறக்கும்.

சினிமா கவர்ச்சி மட்டும் ரஜினிக்கு போதாது. மோடி கவர்ச்சியும் அவருடன் சேர்ந்தால் அது மக்களைக் கவரும் அரசியல் கவர்ச்சியாக மாறக் கூடும்.

இது நடக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


கருத்துகள்

POPULAR IN THIS SITE