மல்லிகாவும், அப்துல் கலாம் ஐயாவும - பரிசு பெற்ற சிறுகதை!

 மல்லிகாவும்அப்துல் கலாம் ஐயாவும்....

(ராஜனின் ஒரு சிறுகதை, இது தினமலர் - வாரமலர் டி.வி.ஆர் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது!)



செல்லம்மாள் முறத்தை கீழே வைத்து விட்டு எழுந்தாள். காலையிலிருந்து சுற்றிய இருநூறு கட்டு பீடிகள் கைகளை அரித்தன. புழுக்கத்தில் உடம்பு பூராவும் எரிந்தது.

நேரே வாசலுக்குக்குப் போய் தொட்டியிலிருந்து தண்ணீரை முகர்ந்து கைகளையும், முகத்தையும் அலம்பிக்கொண்டு முக்குக் கடையில் போய் ஒரு டீ வாங்கி வரக் கிளம்பினாள். 

அப்போது எதிரே அவளின் ஒரே பெண் மல்லிகா முகத்தைஉம்மென்று வைத்துக்கொண்டு பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தாள்.  அவள் முகம் கருத்திருந்தது.

செல்லம்மாள் கேட்டாள்:  ஏன்டி இப்படி ஏதோ எழவு விழுந்த மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு பள்ளிகொடத்துல இருந்து வார. டீச்சரு அடிச்சாகளா...”

மல்லிகா முகத்தை வெட்டிக்கொண்டாள்:  க்கும்....டீச்சரு இருந்தாதானே அடிக்கறதுக்கு.  நானு அப்துல் கலாம் ஐயா மாதிரி மிகப்பெரிய விண்வெளி விஞ்ஞானியா ஆவணுமுன்னு ஆசப்படுறேன்.. ஆனா, இந்த ஸ்கூலுல நாலு கிளாசுக்கு மூணு டீச்சருங்கதான் இருக்காங்க... அதிலும் ஒரு டீச்சரு போன மாசம் பிள்ளைப்பேறுன்னு ஆறு மாசம் லீவுல போய்ட்டாங்க.  டவுன்ல ஸ்கூல்ல படிச்சா நான் நெறைய மார்க் வாங்க முடியும்னு நெறைய பேர் சொன்னாங்க.  ஏம்மா இப்பதான ஸ்கூலு திறந்திருக்கு. திருச்சியில இருக்குற ஒரு தனியார் பள்ளிக்கூடத்துல திரும்பத் திரும்ப டெஸ்ட்டு  வெச்சு எல்லாரையும் எப்படியாவது நூத்துக்கு நூறு வாங்க வெச்சிடுறாங்களாம். அதுல போயி சேந்துட்டா என்ன? நல்லா படிச்சு விஞ்ஞானியா வரலாமில்ல?”

செல்லம்மாள் முகம் கறுத்துப்போனது.  அவளுக்கும் ஆசைதான்.  மல்லிகா, கிராமத்தில் உள்ள மற்றப் பெண் பிள்ளைகள் போல் இல்லை.  எட்டாம் வகுப்பு படிக்கும் அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இந்த ஊர் பள்ளிக்கூட வாத்தியார்களே திணறிப்போவார்கள்.

போன மாசம் கூட சங்கிலிமுத்து வாத்தியார் அவளிடம் சொன்னார்: “இந்தாம்மா செல்லம்மா. உம்பொண்ணு சீமையிலிருந்து வந்த பொண்ணு மாதிரி பெரிய பெரிய கேள்விகளா கேக்குது.  செவனேன்னு அந்தப் புள்ளைய திருச்சியில போயி நல்ல தனியார் ஸ்கூலுல சேத்துடு. அவ்வளோ புத்திசாலிப் புள்ளையை கிராமத்து பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சி வீணாக்காதே. சொல்லுறத சொல்லிப்புட்டேன். அப்புறம் உன் இஷ்டம்..”

செல்லம்மாள் மகளை ஆதரவாக அணைத்துக்கொண்டு, அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள். 

மல்லிகா சங்கிலிமுத்து வாத்தியாரு கூட சொன்னாரும்மா. நீ ரொம்ப புத்திசாலிப் பொண்ணுன்னு. உங்கப்பன்தான் சாராயக்கடையே கதின்னு கெடந்து குடிச்சி குடிச்சி செத்துப் போயிட்டான். ஆனா அவனுக்குப் பொறந்த நீ இவ்வளவு புத்திசாலி புள்ளையா இருக்கறது ரொம்ப சந்தோசமாதான் இருக்கு. ஆனா, பீடி சுத்தறதுல வர்ற வருமானம் மாசம் ரெண்டாயிரம் சோத்துக்கே பத்தலைநல்லெண்ணை விலையே லிட்டரு இருநூத்தி நாப்பது ரூபா விக்குது. அரிசி மட்டும் தான் செலவில்லாம இலவசமா கெடைக்கிது...மத்ததெல்லாம் வாங்கற மாதிரியா இருக்கு? பெரிய ஸ்கூலுல படிக்கவெக்கிறதுக்கு காசுக்கு எங்க பொவேம்மா நானு...அந்த சுடலைச்சாமி மனசு வெச்சா நடக்கட்டும்...இப்ப வா...ஒரு டீயைக் குடிப்போம்..அதுவும் எட்டு ரூபாக்கு களநீரு மாதிரிதான் தருவாக. காலம் கெட்டுக்கெடக்கும்மா.”

மகளோடு போய் டீயைக்குடித்தவள் தன் இயலாமையை நொந்துகொண்டெ இரவு சாப்பிட அடுப்பில் அரிசிப்பானையை வைத்தாள்.


மறுநாள் மதியம் ரெண்டு மணி வாக்கில் போஸ்ட் மேன் மணியடித்தார்.  சுற்றிக்கொண்டிருந்த பீடிகளை அப்படியே வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். 

உம்பொண்ணு பேருக்கு மணி ஆர்டர் வந்திருக்கும்மா...ஐநூறு ரூவா..”

செல்லம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

எம்பொண்ணுக்கு யாருப்பா மணியார்டரு அனுப்பப் போறாங்க? அட்ரஸ் சரியா பாத்தியா?”

ஒம்பொண்ணுக்குத்தாம்மா வந்திருக்கு... பத்திரிக்கையில இருந்து அனுப்பியிருக்காங்க. குறுக்கெழுத்துப்போட்டியில உம்பொண்ணு மொதல் பரிசு வாங்கியிருக்கு. அதுக்குதான் இது. இந்தா, ஒரு கையெழுத்து போடு. ஒம்பொண்ணு சாதாரண பொண்ணு இல்லம்மா.  எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே போட்டியில பரிசெல்லாம் வாங்குது. அறிவு இருந்தாதான் இதிலெல்லாம் ஜெயிக்க முடியும். நல்லா படிக்க வையி அதை...”

பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவள் சுவற்றில் சாய்ந்து கொண்டே கண்களை மூடி யோசித்தாள்.  இந்தப் பிள்ளையை எப்படியாவது நல்லா படிக்க வெக்கனுமே! மல்லிகா வரட்டும், பேசலாம்...கடன வொடனை வாங்கியாவது படிக்க வெச்சிடனும்...அந்தப் புள்ளையோட கனவு வீணாப்போகக் கூடாது..”

மாலை பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மல்லிகாவுக்கு தயாராய் வாங்கி வைத்திருந்த டீயைக் கொடுத்துக் கொண்டே சொன்னாள்:

போட்டிக்கு நீ அனுப்பினதுக்கு பத்திரிகைக்காரங்க ஐநூறு ரூவா அனுப்பியிருக்காங்க.  எம் புத்திசாலிப்பொண்ணு...இந்தா, இது உன் பணம்..எதுக்காவது வெச்சுக்கொ..”

மல்லிகாவின் முகத்தில் ஆயிரம் வாடஸ் பிரகாசம் வந்தது...

நெசமாவா. கடவுளே. நீ என்னெய கவனிச்சிக்கிட்டுதான் இருக்கியா. தேங்க்ஸ் சாமி.”

அதை வாங்கியவள் திரும்பவும் அம்மாவிடமே கொடுத்தாள்.  அம்மா..குடும்ப செலவுக்கு ஏதாவது உதவுமேன்னுதான் அனுப்பி வெச்சேன். பீடி சுத்தி வர்ற வருமானம் போதலைங்கறப்ப, இது மாதிரி எக்ஸ்ட்றாவா வந்தா உனக்கு உதவுமேன்னு அனுப்பினேன். அந்த சாமி கண்ண தொறந்திருச்சு.”

செல்லம்மாள் மகளை வாரி அணைத்துக்கொண்டாள்.

ஏம்மா மல்லிகா. உன் ஆசைப்படி திருச்சியில ஸ்கூலுல உன்னை சேக்கறதுன்னா செலவை எப்படி சமாளிக்கறது? நெறையா கேப்பாங்களேம்மா..”

மல்லிகாவின் முகத்தில் மீண்டும் பிரகாசம்.  அம்மா தன் ஆசையை நிறைவேற்ற விரும்புவதில் அவளுக்கு மகிழ்ச்சி.

அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்: 

அம்மா...நாளையில இருந்து காலையில ரெண்டு வீடு, சாயங்காலம் ரெண்டு வீடு திருச்சியிலயே வீடுகள்ல பாத்திரம் கழுவறேம்மா...எப்படியும் மாசம் ஆயிரம் ரூவா வரும். அதை வெச்சு சமாளிச்சுடலாம். தெனமும் நம்ம ஊருல இருந்து பஸ்ஸ§ போவுது. ஃப்ரீ பாஸ§.. பஸ் செலவு இல்ல. மொதல்ல நாளைக்கே போயி, எவ்ளோ பீஸ§ன்னு கேப்போம்மா...”

சரிம்மா...நாளைக்கு போவோம்...”

மல்லிகா அம்மாவைக் கட்டிக்கொண்டாள். 

அன்று இரவு அவளுக்குத் தூக்கமே வரவில்லை.  அப்துல் கலாம் ஐயா மாதிரி விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட்டதாகவே தோன்றியது அவளுக்கு. இரவு முழுவதும் விண்வெளியில் பறந்தாள்.

மறுநாள் காலை எட்டரை மணி பஸ்ஸில் ஏறி திருச்சிக்கு வந்து, அந்த பெரிய பள்ளிக்கூடத்தை அடைந்தார்கள். அந்தக் கட்டடங்களைப் பார்த்ததுமே செல்லம்மாளுக்கு உதறல் எடுத்தது.  கேட்டுக்கு வெளியே ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்கள் வித விதமான மாடல்களிலும், நிறங்களிலும் நின்றிருந்தன. அவற்றின் அருகே அட்மிஷனுக்காக வந்திருந்த பெரிய இடத்து மனிதர்கள் கேட் திறக்கக் காத்திருந்தார்கள்.

மல்லிகாவுக்கு நாக்கு வறண்டு போனது. இங்கே நமக்கெல்லாம் இடம் தருவாங்களா? சுடலைசாமியை வேண்டிக்கொண்டாள்.

கேட் திறந்ததும், ஒரு ஹாலில் அனைவரையும் உட்கார வைத்தார்கள்.  ஒவ்வொருவருக்கும் நேரம் குறித்து ஒரு டோக்கன் தந்தார்கள்.  கூடவே ஒரு வினாத்தாளையும் ஒவ்வொருவருக்கும் தந்து விடை எழுதித் தரச் சொன்னார்கள்.  செல்லம்மாள் ஒரு ஓரமாக ஒடுங்கி நின்றுகொண்டாள்.

புத்திசாலியாதலால், மல்லிகாவுக்கு பெரும்பாலான விடைகள் தெரிந்திருந்தன.  நன்றாகவே எழுதினாள்.  ஒரு மணி நேரத்தில் விடைத் தாளை அங்கிருந்த ஊழியரிடம் தந்தாள். அவர் இவளை ஒரு மாதிரியாக கேலியாக பார்த்துவிட்டு விடைத்தாளை வாங்கிக் கொண்டார்.  உனக்கெல்லாம் இங்கே இடம் கிடைக்காதுஎன்று கூறுவது போல இருந்தது அந்தப் பார்வை.

பின் ஒவ்வொருவராக பிரின்சிபால் அறைக்கு அழைத்தார்கள்.  மல்லிகாவின் முறை வந்த போது, மல்லிகா அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டே பயத்துடன் பிரின்சிபால் அறை உள்ளே போனதும் தயங்கி நின்றாள்.

பிரின்சிபால் அவர்களைப் பார்த்ததும் அதிர்ந்தார்.  யாரோ வரக்கூடாத இடத்துக்கு வந்துவிட்டதைப் போல,  கண் கண்ணாடியைக் கழற்றி இவர்களைப் பார்த்தார்.

வாங்கம்மா, வந்து உட்காருங்க 

மல்லிகாவும், செல்லம்மாவும் இருக்கையின் நுனியில் தயங்கியபடி உட்கார்ந்தார்கள்.

பிரின்சிபால் மல்லிகாவையும், அவள் எழுதியிருந்த விடைத்தாளையும் மாறி மாறி பார்த்தார். பின் பேச ஆரம்பித்தார்:

நீங்க எல்லா விபரங்களையும் கேட்டுட்டுதான் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்....”

செல்லம்மாள் தயங்கியபடி சொன்னாள்:  ஐயா, எங்களுக்கு எந்த விபரமும் தெரியாதுய்யா.  எம்பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிறா. அப்துல் கலாம் ஐயா மாதிரி விண்வெளி விஞ்ஞானியா ஆகணும்னு அவ ஆசைப்படுறா. அதான், நல்ல ஸ்கூல்ல படிக்க வெக்கலாமேன்னு இங்க வந்தோம்யா.”

ஏனோ, அம்மாவின் பதிலைக்கேட்டதும் மல்லிகாவின் கண்கள் கலங்கின.

பிரின்சிபால் பேசினார்: “இது கொஞ்சம் வசதியுள்ளவங்க படிக்கற ஸ்கூல்மா. அதுவும், பெத்தவங்க நல்லா படிச்சவங்களா இருந்தாதான் இங்க சீட் குடுப்போம்..”

செல்லம்மாள் அப்பாவியாய் கேட்டாள்:  ஐயா...நானாய்யா படிக்க வரப்போறேன்? எம்பொண்ணுதானேய்யா வரப்போவுது. என்னைப்போல எம்பொண்ணு கஷ்டப்படக் கூடாதுன்னுதானேய்யா இங்க வாறோம்

நீங்க சொல்றது சரிதாம்மா. ஆனா, நான் இந்த ஸ்கூல் சட்ட திட்டங்களை மீறி ஒன்னும் செய்ய முடியாது இல்லையா? ஒருவேளை, பொண்ணு என்ட்ரென்ஸ் டெஸ்டுல நிறைய மார்க் வாங்கியிருக்கறதால, நீங்க படிக்காதவங்களா இருந்தா பரவாயில்லைன்னு பேசி சம்மதம் வாங்கித் தர்றேன்னு வெச்சிக்கோங்க. பணம் நிறைய செலவாகுமேம்மா. என்ன செய்வீங்க?”

செல்லம்மாள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

எப்படியாவது சமாளிச்சிடுவோம்யா. இந்தப் பிள்ளைக்கு ஒரு சீட் போட்டுக் குடுங்கய்யா

பிரின்சிபால் மோவாயைத் தடவிக்கொண்டு யோசித்தவர் பின் சொன்னார்:

சரிம்மா, நல்ல பொண்ணா இருக்கேன்னு சீட் தர்றேன்...போய் ஃபீஸைக் கட்டுங்க.”

மல்லிகா சுடலைச் சாமிக்கு நன்றி சொன்னாள்.  செல்லம்மாள் கையெடுத்துக் கும்பிட்டவாறு கேட்டாள்:

ஐயா.. ஃபீஸ் எவ்ளோன்னு சொன்னீங்கன்னா நாளைக்கு வந்து கட்டிடுவோம்யா

இன்னிக்கே கட்டனும்மா..சரி, .கே, உங்களுக்காக நாளை வரை டைம் தர்றேன். எழுதிக்கோங்க. அட்மிஷன் ஃபீஸ் ஆயிரத்து ஐநூறு; டியூஷன் ஃபீஸ் இருபத்து எட்டாயிரம்; லேப் ஃபீஸ் ரெண்டாயிரம்; பில்டிங் டொனேஷன் பத்தாயிரம்; அப்புறம்... ஸ்கூல்லயே நடத்தப்போற ஸ்பெஷல் க்ளாஸ§க்காக நாலாயிரம், ஆக, மொத்தம் நாற்பத்தி அஞ்சாயிரத்து ஐநூறு; இதில, பாதியை நாளைக்குக் கட்டனும்.  மீதியை அடுத்த டெர்ம்ல, அதாவது, நாலு மாசத்துல கட்டனும். சரியா?”

அவர் கூறக் கூற, மல்லிகாவின் இள ரத்தம் சூடானது.  செல்லம்மாளுக்கு தலை கிறுகிறுத்தது.  சேரின் நுனியைப் பிடித்துக்கொண்டாள்.

கலக்கத்துடனே செல்லம்மாள் கேட்டாள்:  ஐயா...எம்பொண்ணு வீட்டு வேலை செஞ்சுதான்யா படிக்கனும். ஏதோ வருஷத்துக்கு பத்தாயிரம் வரைக்கும்னா சம்பாதிச்சு கட்டிடலாம்யா. அதுவும், மாசம் ஆயிரம் ரூபாயாதான்யா கட்ட முடியும். கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா

பிரின்சிபால் சற்று கோபமானார்: “இங்க பாருங்கம்மா. உங்களுக்கு பணம் கட்ட முடியலன்னா, உங்களுக்கு ஏத்த ஸ்கூல்ல சேர்த்துக்கங்கம்மா. எங்க நேரத்தை ஏன் வீணடிக்கிறீங்க? முடிஞ்சா சேருங்க. இல்லாட்டி கிளம்புங்க

செல்லம்மாள் விடவில்லை:  ஐயா..நீங்க நினைச்சா முடியும்ங்கய்யா..”  என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மல்லிகா அவள் வாயைப் பொத்தியபடி சீட்டிலிருந்து எழுந்தவளாகக் கூறினாள்:

அம்மா.  யார்கிட்டேயும் எனக்காகக் கெஞ்சாதே. அறிவுங்கறது சொல்லிக்கொடுத்து மட்டும் வர்றதில்லை. நம்பளோட சுய முயற்சியாலயும் கூட நம்மளோட அறிவை வளர்த்துக்க முடியும்.  இப்ப என்ன? நம்ம ஊரு ஸ்கூலுல டீச்சருங்க ரெகுலரா வர்றதில்ல. அவ்வளவுதானே.  கொஞ்சம் முயற்சி செஞ்சா, நானே புரிஞ்சிக்க முடியாதா என்ன? ஆண்டவன் எனக்கு அந்த அறிவைத் தந்திருக்கார்.  நம்ம இந்தியாவுல நல்ல பள்ளிக்கூடங்கள் தனியார் கைல வியாபாரமா இருக்குன்னு நம்ம ஸ்கூலு சங்கிலிமுத்து வாத்தியார் சொல்வாரு. அப்துல் கலாம் ஐயா மாதிரி வரனும்னுதானே ஆசைப்பட்டேன்? அப்துல் கலாம் ஐயா என்ன இந்த மாதிரி பெரிய ஸ்கூல்லயா படிச்சாரு? அவரும் கவர்ன்மெண்டு ஸ்கூல்லதானே படிச்சு வந்தாரு? இன்னிக்கு இருக்கிற பல பெரிய மனுஷங்க எல்லாம் கவர்மெண்டு ஸ்கூல்ல படிச்சுதானே வந்திருக்காங்க? அதுபோல, நானும், நம்ம கவர்ன்மெண்டு ஸ்கூல்லயே படிச்சு, கலாம் ஐயா மாதிரி விண்வெளி விஞ்ஞானியா வருவேன்இந்த மாதிரி கல்வி வியாபாரம் செய்யற ஸ்கூல் நமக்கு வேண்டாம்மா! ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டைஅதுபோல, நமக்கு அந்த ஸ்கூலே போதும்மாஎன் கனவை எப்படி நெஜமாக்கிறதுன்னு எனக்குத் தெரியும்மா. வா, போகலாம்.”

கூறியவாறே அம்மாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, விடு விடு என வெளியேறிய மல்லிகாவை, அதிர்ச்சியுடன் பார்த்தார் பிரின்சிபால்.

வெளியே வந்ததும், செல்லம்மாள் மல்லிகாவை இறுக அணைத்துக் கொண்டு, முகம் முழுக்க முத்தமிட்டாள்.

என் செல்லமே, உன்னைப் பெத்ததுக்கு இன்னிக்கு நான் ரொம்ப பெருமைப் படறேம்மா..நீ நிச்சயம் சாதிப்பே. வாம்மா போகலாம்

மகளின் கையைப்பிடித்துக்கொண்டே பெருமையுடன் நடந்தாள் செல்லம்மாள்.

கேட்டுக்கு வெளியெ வந்து அந்தக் கட்டடங்களைப் பார்த்த போது, வந்த போது இருந்த பயம் வரவில்லை.  பெரிய சிறையிலிருந்து விடுதலை ஆனது போல் இருந்தது அவர்களுக்கு.

கருத்துகள்

POPULAR IN THIS SITE