ஓட்டுக்கு துட்டு - பரிசு பெற்ற சிறுகதை !

ஓட்டுக்கு துட்டு - தினமலர் வாரமலரில் பரிசு பெற்ற சிறுகதை!
( By Rajan, Admin )

(A Story that got selected in Dinamalar - Varamalar TVR Story Contest)சங்கரலிங்கம் பூஜைகளை முடித்துவிட்டு சற்று ஓய்வாக வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தார். ஆனால் அவரால் அமைதியாக ஓய்வெடுக்க முடியவில்லை.  இன்னும் இருபது நாளில் தேர்தல் வருவதால், தெரு முனையில் ஒலிபெருக்கிகளில் தலைவர்களின் பேச்சுக்களும், திரைப்படப் பாடல்களும் ஒலித்த சத்தம் காதுகளைப் பதம் பார்த்தது.

போய் ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்கச் சொல்லலாம் என்று கிளம்பினார்.

"எங்கே கிளம்பிட்டீங்க? ஊர் பிரச்னையைத் தீர்க்கவா? எவன் எப்படிப் போனா உங்களுக்கு என்ன? நாட்டுக்காக இத்தனை வருஷம் உழைச்சது போதாதா? சொச்ச காலமாவது வீட்டுக்காக நேரத்தை செலவழிக்கக் கூடாதா?"

மனைவி பங்கஜத்துக்கு என்ன சொல்லி புரிய வைப்பது?

"இங்க பாரு பங்கஜம். எல்லாருமே 'நமக்கெதுக்கு வம்பு" ன்னு ஒதுங்கிட்டா, தவறு செய்யறவங்களுக்கு துளிர் விட்டு போய்டும். நம்மளைக் கேட்க ஆளே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு மேலும் மேலும் தவறு செய்வான்.  நான் ராணுவத்துல அதிகாரியா இருந்தவன். என்னோட நோக்கம் நல்லதா இருக்கும்போது, நான் ஏன் தப்பு செய்யறவங்களை தட்டிக் கேட்க பயப்படணும்? ஊர்ல நல்ல பேரும் மதிப்பும் உள்ளவங்கதான் அதைப் பயன்படுத்தி நிறைய நல்ல காரியங்களைப் பண்ணமுடியும்.  எத்தனையோ நோயாளிங்க இருக்கும் ஊர்ல, இப்படி அதிக சத்தமா ஸ்பீக்கரைப் போட்டா அவங்கள்ளாம் சிரமப் பட மாட்டாங்க?"

சொல்லிவிட்டுப் போனவர் ஒலிபெருக்கி சத்தத்தைக் குறைக்கவைத்துவிட்டுத்தான் வந்தார்.

அவருக்கு அயர்ச்சியாகத்தான் இருந்தது.  இருபத்தைந்து ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேவை செய்துவிட்டு, பணி ஒய்வு பெற்றதும் சற்று ஓய்வாக சொந்த அத்திப்பட்டு கிராமத்தில் வந்து சமூகப் பணிகளை கவனித்துக்கொண்டே மீதி காலத்தைக் கழிக்கலாம் என்று வந்தவர் அவர். குளம் ஆழப்படுத்துவது, கிராமத்து ஏரியை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்ற அதிகாரிகளுடன் போராடி தடுத்து நிறுத்தியது என்று ஏராளமான சமூகப் பணிகளை செய்வதில் அவருக்கு பொழுதும் உருப்படியாக ஓடுவதுடன், தவறுகள் நடப்பதைத் தடுத்த மன நிறைவும் கிடைப்பதால், எத்தனையோ எதிர்ப்புகள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்து வந்தாலும் அவர் நிறுத்துவதாயில்லை. இவருக்கு ஊரில் நல்ல மதிப்பு இருப்பதால், ஒரு அளவுக்கு மேல் அவரை மிரட்டவும் அவர்கள் தயங்குவார்கள்.  பஞ்சாயத்துத் தலைவரை அடிக்கடி சந்தித்து ஊர் பிரச்னைகளை சொல்லிச் சொல்லி பல காரியங்களையும் எப்படியாவது செய்யவைத்துவிடுவார் அவர்.

மக்கள் கூட பேசிக்கொண்டார்கள். சங்கரலிங்கம் ஐயா இல்லாவிட்டால் கிராமத்தில் இத்தனை காரியங்கள் நடந்திருக்காது என்று.  அவர் என்றுமே தன் சுயநலத்துக்காக எதையும் செய்வதில்லை என்பதால் ஊரில் அவர் சொல்லுக்கு நல்ல மதிப்பிருந்தது.

அவருக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. தேர்தல் என்றால் அமைதியாக நடக்கவே முடியாதா?  இது என்ன இத்தனை ஆர்ப்பாட்டங்கள், இத்தனை முறைகேடுகள்? தேர்தல் கமிஷன் திறமையாக ஏதாவது தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால், இந்த அரசியல்வாதிகள் அதைவிடத் திறமையாகத் திட்டமிட்டு தாங்கள் நினைப்பதைச் சாதித்துவிடுகிறார்களே என்பதை அவர் எண்ணிப் பார்த்தபோது, நம் நாட்டில் குற்றவாளிகள் நிர்வாகத்தை விடவும் அதிக திறமைசாலிகளாகிவிட்டதாக அவருக்குத் தோன்றியது.

இப்படித்தான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒரு பெண் இவர் வீட்டுக்கு வந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, அவள் சார்ந்த கட்சிக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

சங்கரலிங்கம் அவளிடம் கேட்டார்:

"ஏம்மா, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கறதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா? இன்னிக்கு காந்தி இருந்திருந்திருந்தா, இதயெல்லாம் பார்த்து இதுக்காகவா சுதந்திரம் வாங்கித்தந்தேன்னு தற்கொலை பண்ணிக்கக் கூட துணிஞ்சிருப்பார் தெரியுமா? ஜனநாயகத்தோட நோக்கமே மக்கள் தனக்கு யார் நல்லது செய்வாங்கன்னு நினைக்கிறாங்களோ அவங்களை தாங்களே தேர்ந்தெடுக்கற உரிமையை கொடுப்பதுதாம்மா.  அதைப்போய் இப்படி கேவலமா விலை பேசறீங்களே.  மக்கள் புத்திசாலிகளாயிட்டா நீங்கள்ளாம் பிழப்பு நடத்த முடியாதுங்கறதுக்காக, இப்படி அவங்களை எப்போதும் முட்டாளாகவே வெச்சிருக்க நினைக்கிறீங்களே, இது கேவலமான செயல் இல்லையா?  இந்தப் பணத்தை நான் வாங்கமுடியாதும்மா. இந்தா நீயே வெச்சிக்கோ. இதுக்கு அடுத்த தேர்தல்ல ஒரு முடிவு கட்டினாத்தான் சரிப்பட்டு வரும்.  என்னால இந்த நாட்டைத் திருத்த முடியுதொ இல்லையோ, அட்லீஸ்ட், இந்த ஊரில் மட்டுமாவது இதை செஞ்சிட்டா இதைப் பார்த்து மத்த ஊர்கள்ளயும் செய்வாங்க இல்லியா? ஒவ்வொரு ஊர்லயும் ஒருத்தர் இதை முன்னெடுத்தால் போதும், இந்த ஓட்டுக்கு துட்டு என்கிற அசிங்கத்தை ஒழிச்சுடலாம்.  இந்த வருஷத்தோட இதுக்கு ஒரு முடிவு கட்டறேன் பாரு"

அந்தப் பெண் இவரை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:

"என்னங்கய்யா இப்படி வித்தியாசமான ஆளா இருக்கீங்க? நான் இதுவரை நூருபேருக்கு மேல குடுத்துட்டேன்.  என் வீட்டுக்கு ஏன் இன்னும் வரலைன்னு படிச்ச பணக்காரங்க கூட என்கிட்ட சண்டைக்கு வர்றாங்க. நீங்க என்னமோ திருப்பித்தர்றீங்களே?"

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவர் அன்று இரவு தூங்கிகொண்டிருந்தபோது, அவர் வீட்டு வாசலில் ஒரு கவரைத் தூக்கிப்போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்.  காலையில் பால் வாங்க வந்தபோது அதைப் பார்த்தவர் அதிர்ந்துவிட்டார்.  அறுநூரு ரூபாய் பணத்துடன் கட்சியின் பெயருடைய நோட்டீசும் அதில் இருந்தன.

புரிந்துகொண்டார்.  நான் காசுவாங்க விரும்பாவிட்டாலும் கூட, என் மனைவிக்கு அந்த ஆசை இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு ஒட்டுகளுக்கு அறுநூரு ரூபாயைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறாள் அந்தப் பெண்.

அவருக்கு ரத்தம் கொதித்தது.  ஒரு மனுஷன் நேர்மையாக வாழவே விடமாட்டார்களா இவர்கள்? இப்படி ஒருத்தன் விரும்பாவிட்டாலும் கூட அவனே அறியாமல் அவனின் கௌரவத்துக்கு சவால் விடும் படி பணம் கொடுப்பதும், அவனைத் தவறு செய்யத் தூண்டுவதும் எவ்வளவு கேவலமான செயல்?  ஜனநாயகத்தை இப்படிக் கேலிக்கூத்தாக்குகிறார்களே! மக்களை இப்படி வலுக்கட்டாயமாக முட்டாளாக்குகிறார்களே!

முடிவெடுத்துவிட்டார். இனி இதை இப்படியே விட்டால் சரியாக வராது. இந்தத் தேர்தலில் பெரும்பாலும் கொடுத்து முடித்திருப்பார்கள்.  எனவே, அடுத்த தேர்தலில் இதை நடக்கவிடக் கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டார்.

உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போய், அந்தப் பெண்ணின் முகத்தில் வீசாத குறையாக அந்தக் கவரைத் தூக்கி அவள் முன்னே எறிந்தார்.

"இனிமே எனக்குப் பணம் குடுக்க முயற்சி பண்ணினே, தேர்தல் கமிஷன் கிட்டே புகார் கொடுத்துடுவேன். பாத்துக்கோ."

அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள்:

"அதையெல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு எங்களுக்குத் தெரியும் வீரரே. நீங்க இருபத்தஞ்சு வருஷம் ஊரை விட்டுப் போய் ராணுவத்தில் இருந்ததால, நாட்டு நடப்பெல்லாம் உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்.  எது வந்தாலும், எங்க தலைவர் பார்த்துப்பார்.  போய்ட்டுவாங்க"

உண்மைதான்.  ராணுவத்தில் இருந்ததால், இந்த இருபத்தைந்து வருஷத்தில் நடந்த இத்தகைய "முன்னேற்றங்கள்" பற்றி அவர் ரொம்பவும் அறியமுடியாமல் போனது.  செய்தித்தாள்களில் படித்திருந்தார்தான்.  ஆனால், இப்போது தாமே நேரில் அதைப் பார்த்தபோது கொதித்துத்தான் போனார்.

அப்போதே முடிவு செய்திருந்தார். இந்த விஷயத்தில் தான் ஏதாவது உருப்படியாக செய்தாக வேண்டும்.

இதோ, அடுத்த தேர்தல் வந்துவிட்டது.  இன்னும் இருபது நாளில் முடிந்துவிடும்.  இது சட்டசபைக்கான தேர்தல் என்பதால் இன்னும் தீவிரமாக இருப்பார்கள்.  கடைசி சில நாட்களில் பணம் தரப்படக் கூடும்.  தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தெருவிலுமா 24 மணி நேரமும் ஆட்களை காவலுக்கு நியமிக்கமுடியும்?  மனிதர்களகப் பார்த்து திருந்தாவிட்டால், சீர்கேட்டைத் தடுக்கவே முடியாது.  நம்மால் முடிந்தது, இந்த அத்திப்பட்டு கிராமத்தையாவது, இந்த ஜனநாயகச் சீரழிவிலிருந்து காப்பாற்றவேண்டும். மற்ற ஊர் மக்களுக்கு இந்த மாற்றத்தை உதாரணமாக்கவேண்டும்.

அமைதியாக உட்கார்ந்து, ஒரு காகிதத்தில் தன் செயல் திட்டத்தை எழுத ஆரம்பித்தார்:

ஊரில் மொத்த வாக்காளர்கள் - 2856 பேர்.  பதின்மூன்று சுய உதவிக் குழுக்கள். அதில் சுமார் இருநூற்று அறுபது உறுப்பினர்கள்.  நான்கு இளைஞர் மன்றங்கள்.  அதில் சுமார் ஐநூறு உறுப்பினர்கள்.  முதலில் இந்த பதினேழு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களையும் சந்திக்கவேண்டும்.  மேலும், ஒவ்வொருவரு வாக்காளருக்கும் தருவதற்கு, மிக விளக்கமாகத் தயாரிக்கப்பட்ட சுமார் 3500 நோட்டீஸ்கள் தேவைப்படும். இதற்கு சுமார் நாலாயிரம் ரூபாய் ஆகும்.  ஊரில் 36 தெருக்கள்.  இவற்றில் வைக்க நோட்டீஸ் ஒட்டிய சுமார் 40 தட்டிகள் தேவைப்படும். அதற்கு சுமார் நாலாயிரம் ரூபாய் தேவைப்படும்.  ஆக, சுமார் பத்தாயிரம் இருந்தால், நம் முயற்சியை செயல்படுத்திவிடலாம்.  என் பென்ஷன் சேமிப்பிலிருந்து இதற்குப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.  ஒரு நல்ல காரியத்துக்காக சிறிதளவு செலவிடுவதில் தவறில்லையே!

முதலில் நோட்டீஸில் எழுதவேண்டிய விஷயங்களை எழுதினார்:

"ஐந்து ஆண்டுகள் ஆள்வதற்காக அவர்கள் தரும் முந்நூறு ரூபாய்க்காக, அதாவது, ஒரு நாளைக்கு பதினாறு காசுக்காக உங்கள் விலைமதிப்பில்லாத ஓட்டை விற்கப் போகிறீர்களா?"

"காந்தி போன்ற பெரியோர்கள் வாங்கிக் கொடுத்த ஜனநாயக உரிமையை கேவலம் பதினாறு காசுக்கு விற்று பிச்சைக்காரர்களை விடவும் கீழே போகப் போகிறீர்களா? இதுதான் அந்தத் தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா?"

"நம்மிடமிருந்து சம்பாதித்த காசுதானே நமக்கு திரும்பி வருது என்று தவறாக நினைக்காதீர்கள்!  ஒருவர் நேர்மையான முறையில் சம்பாதித்திருந்தால், அவரால் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களுக்கு பணம் தர முடியாது.  நேர்மையற்ற முறையில் கமிஷன் பெற்றோ, லஞ்சம் பெற்றோ, அல்லது அப்பாவி மக்களை ஏமாற்றியோ சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு பகுதியே உங்களுக்குத்  தரப்படுகிறது என்பதை அறியுங்கள்.  பணம் கொடுத்து அவர்கள் ஜெயித்ததும், கொடுத்த பணத்தை விட பல மடங்கு மீண்டும் சம்பாதித்துவிடுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்! இதற்காக அவர்கள் இன்னும் அதிகமாக ஊழல் செய்வார்கள்.  இதற்கு நீங்கள் காரணமாக வேண்மா?"

"மிக முக்கியமான ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஒருவர் பலரை ஏமாற்றி சம்பாதித்து அந்தப் பணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது பலபேர் வயிற்றில் அடித்த அவர்களின் பாவத்தையும் உங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு, அவர்களின் பாவத்தைக் குறைத்துக்கொள்கிறார் என்பதை அறிவீர்களா? நீங்கள் கைநீட்டி வாங்குவது பணத்தை அல்ல. பலபேரை ஏமாற்றிய வேட்பாளரின் பாவத்தில் உங்களுக்கான பங்கை என்பதை அறியுங்கள்! ஒருவர் நேரடியாக செய்தால்தான் பாவம் என்றில்லை. பிறருடைய பாவத்தின் லாபத்தை ஏற்றுக்கொண்டாலும் அந்தப் பாவத்தில் நீங்களும் பங்கேற்கிறீர்கள்!  ஏற்கனவே அறிந்தும் அறியாமலும் ஏற்கனவே நாம் செய்த பாவங்களுக்காக நாம் இப்போது பட்டுவரும் சிரமங்கள் போதாதா? உங்கள் பிள்ளைகளுக்கும் நீங்கள் பாவத்தைத்தான் சேர்த்துவைக்க வேண்டுமா? இதற்கான தீய பலனை உங்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளும் அனுபவிக்கவேண்டுமா? இதுதான் நல்ல பெற்றோர்களின் இலக்கணமா?"

"இன்று ஓட்டுக்காக நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகள், எதிர்காலத்தில் நேர்மையான மனிதர்களாக வரவேண்டும் என்று விரும்புவார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் அனுபவப் பாடம் இதுதானா?"

"ஓட்டுக்காக இன்று காசு வாங்கிவிட்ட நீங்கள் எதிர்காலத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி செய்யும் தவறுகளைப் பற்றிப் பேசவோ, அல்லது உரிமையோடு தட்டிக்கேட்கவோ முடியுமா? காசு வாங்கிக்கொண்டுதானே ஓட்டுப் போட்டாய் என்று அவர்கள் பதிலுக்குக் கேட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வது?"

“உழைக்காமல் கிடைக்கும் ஒரு ரூபாய் கூட நமக்கு ஒட்டுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? தினசரி நாம் சம்பாதிக்கும் வருமானத்துடன் ஒப்பிடும் போது, லஞ்சமாக வரும் அற்பமான இந்த பதினாறு பைசா அந்த அளவு முக்கியமானதா? இதற்காக உங்கள் கௌரவத்தை அவர்களிடம் அடகு வைக்கவேண்டுமா?”

“ஊழல் பணத்தில் ஓட்டுப் பெற முயற்சிப்பவரை ஒதுக்கி, இருக்கின்ற வேட்பாளர்களுக்குள் யார் ஒருவர் கொஞ்சமாவது நல்லது செய்ய உண்மையிலேயே விரும்புகிறார் என்பதை ஒப்பிட்டுப் பார்த்து அவருக்கு வாக்களித்து,  இயன்ற வரை இருப்பவர்களில் சிறந்தவரை மட்டுமே அதிக வாக்குகளைப் பெற வைத்து, அவர்களை ஊக்கப்படுத்துங்கள்! இதுவே ஜனநாயகத்தின் உண்மையான நோக்கமாகும்! இதன் மூலம், தகுதியில்லாதவர்கள் நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவது போல் உங்களுக்கு பணத்தை வீசி எறிந்து, அதன் மூலம் பதவிக்கு வரும் அவலத்தை நீங்கள் தடுக்கமுடியும்! நேர்மையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்தல்களில் தைரியமாகப் போட்டியிட ஊக்குவிக்க முடியும். ஏனென்றால், பணம் உள்ளவர்கள், மக்களைப் பணத்தால் அடித்து, வசதியற்ற, ஆனால் நேர்மையான வேட்பாளர்களை தோற்கடித்து விடுகிறார்கள். இதனால், நேர்மையானாவர்கள், தேர்தலில் நிற்பதையே தவிர்த்து ஒதுங்கும் அபாயம் வந்துவிட்டது. இது தொடர்ந்தால், இந்த நாடே ஊழல்வாதிகளின் கைகளுக்குப் போய்விடும்.”

“எனவே, யாராவது உங்களிடம் பணம் கொடுக்க வீட்டுக்கு வந்தால், அவர்களை உடனடியாக போகச் சொல்லுங்கள்! வற்புறுத்தினாலும், இடம் கொடுக்காதீர்கள்! ஒரு வேளை, அவர்கள் உங்கள் வீட்டில் பணம் உள்ள கவரைப் போட்டுவிட்டுச் சென்றாலும் கூட, உடனே, அதனை அந்தக் கட்சியின் பகுதி அலுவலத்திற்குச் சென்று, அவர்கள் முன்னே போட்டுவிட்டு வாருங்கள்! இதன் மூலம், உங்கள் கௌரவத்தையும், தனித் தன்மையையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!  இவ்வாறு நேர்மையாகச் செயல்படுவது எவ்வளவு சந்தோஷத்தையும், பெருமையையும் தருகிறது என்பதை அனுபவித்து உணருங்கள்! இந்த கிராமத்தை நம் நாட்டுக்கே உதாரணமான ஓட்டுக்கு லஞ்சமற்ற கிராமமாக மாற்றுவோம்!”

இப்படி ஏராளமான, சவுக்கால் அடிப்பது போன்ற, படிப்பவரை வெட்கப்பட வைக்கின்ற கேள்விகளுடன் நோட்டீஸ§க்கான விஷயங்களை எழுதினார் அவர். உடனடியாக அருகிலிருந்த அச்சகத்தில் கொடுத்து 3500 நோட்டீஸ்களை அச்சடித்து அடுத்த நாள் காலையிலேயே வாங்கினார்.

காலம் கடத்தாமல், நாற்பது விளம்பரத் தட்டிகளையும் எழுதி வாங்கினார். அதில்,  “இந்தத் தெருவுக்குள் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. எனவே, அந்த நோக்கத்துடன் யாரும் தெருவினுள் நுழையவேண்டாம்! மீறி, கொடுக்க முயல்பவர்களின் கட்சிக்கு நாங்கள் வாக்களிக்கமாட்டோம்!  இங்ஙனம் தெருவில் உள்ள அனைத்து வாக்காளர்கள்.” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்தது.

நோட்டீஸ் மற்றும் தட்டிகளின் மாதிரிகளோடு, முதலில் ஊரில் உள்ள நான்கு இளைஞர் மன்றங்களின் நிர்வாகிகளையும்,  பதின்மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகளையும் இரண்டு நாட்களுக்குள் சந்தித்தார்.  நோட்டிஸில் இருந்த விபரங்களைக் காட்டி அவர்களிடம் தெளிவாக விளக்கமளித்தார்.

“இந்த மிக முக்கியமான பொதுப்பணியில் நீங்கள்லாம் என்னோட ஒத்துழச்சீங்கன்னா, நிச்சயமா நம்ம ஊர் நாட்டுக்கே முன்மாதிரியா ஆகி, நமக்கெல்லாம் பெருமை கிடைக்கும். இதுக்கு, என் ரெண்டு கைகள் போதாது. குழுக்களா இருக்கற உங்க எல்லாரோட உதவியும் தேவைப்படும். சுதந்திரம் கிடைச்சு எழுபது வருஷமாகியும், எத்தனை காலத்துக்குத்தான் அசிங்கமா தவறுகளுக்கே துணைபோறதோட, மக்களை கையேந்தும் பிச்சைக் காரர்களாகவே வெச்சிருக்கறது? நாம நினைச்சா, இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டமுடியும்”

சங்கரலிங்கம் காட்டிய நோட்டீஸின் வாசகங்களைப் படித்த அந்த நிர்வாகிகள் அசந்து போயினர்.  ஓட்டுக்கு வாங்கும் பணத்தில் இத்தனை விளைவுகளா? இதைவிட கூர்மையாக மக்கள் புரிந்துகொண்டு வெட்கப்படும் வகையில் அழகாகத் தொகுத்துக்கூற இயலாது என்பதைப் புரிந்துகொண்டனர்.  வயதில் மூத்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சங்கரலிங்கத்தின் நேர்மையான நல்ல முயற்சிக்கு உதவி செய்வதன் மூலம், இந்த கிராமத்தை உதாரண கிராமமாக உருவாக்கமுடியும் என்று உறுதியாக நம்பினர்.  ஏற்கனவே, சில அரசியல் கட்சிகள் அவர்களை பணம் வினியோகம் செய்ய அணுகியிருந்தாலும், அதற்கு ஒத்துழைப்பதில்லை ஏன்று உடனடியாக முடிவு செய்தனர்.

“சங்கரலிங்கம் சார்.  ஒரு நல்ல காரியம் பண்ண அருமையான வாய்ப்பும், வழிகாட்டலும் குடுத்திருக்கீங்க! இந்த நோட்டீஸ்ல இருக்கற கூர்மையான வார்த்தைகள் நிச்சயமா மக்களை சிந்திக்க வைக்கும். இந்த நல்ல முயற்சியில, நாங்க எல்லோரும் உங்க கூட இருப்போம்.  இப்பவே வேலையை ஆரம்பிக்கலாம்”

ஊரின் அனைத்து தெருக்களின் முனைகளிலும் விளம்பரத் தட்டிகளைக் கட்டவும், ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ்களை விநியோகிக்கவும், உதவுமாறு சங்கரலிங்கம் அவர்களைக் கேட்டுக் கொண்டபோது உடனடியாக மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.

அடுத்ததாக, காரியங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன!  மகளிர் சுய உதவிக்குழுக்களின் 260 உறுப்பினர்களும், இளைஞர் மன்றங்களின் சுமார் 500 உறுப்பினர்களும் களத்தில் இறங்கினர்.  இரவோடு இரவாக அனைத்துத் தெரு முனைகளிலும் அறிவிப்புத் தட்டிகள் வைக்கப் பட்டன.  ஊரின் நுழைவாயிலில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்தத்தில், ஒரு பெரிய அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது.

அடுத்தநாள் காலையிலேயே, 760 பேரும் வீடு வீடாகச் சென்று அனைத்து வீடுகளிலும் விளக்கமாகவும், அழகாகவும் தயாரிக்கப் பட்ட நோட்டீஸ்களை வினியோகித்தனர்.

இந்த விஷயம் அந்த ஊரில் அதிகம் பேசப்படும் விஷயமாகிப் போனது. எங்கு பார்த்தாலும் மக்கள் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களை பற்றி ஆர்வமாக விவாதித்தனர்.  அதன் ஒவ்வொரு வாக்கியமும் அவர்களால் மறுக்கமுடியாத விஷயமாக இருந்தது.  ஓட்டுக்குப் பணம் வாங்குவதன் தீவிர எதிர்மறை விளைவுகளை கிட்டத்தட்ட அனைவருமே உணர்ந்தனர்.  ஒரு சிலருக்கு, பணம் வாங்கவேண்டும் என்ற நப்பாசை இருந்தாலும், வெறும் பதினாறு பைசாவுக்காக  பொருந்தாத வேட்பாளர்களிடம் தன்னையே அடகு வைக்கிறோம் என்ற அசிங்கமான உண்மையும் அவர்களைச் சுட்டது.  பாவ புண்ணியத்தில் நம்பிக்கை உள்ள பெரும்பான்மையானோர், ஓட்டுக்குப் பணம் பெறுவதிலுள்ள கர்ம விளைவுகளையும் அறிந்துகொண்டனர்.

இவ்வளவு விவரங்களை அறிந்த பின்னரும், ஓட்டுக்குப் பணம் பெறுவது அவமானம் என்பதை ஏறத்தாழ அனைவருமே உணர்ந்துகொண்டனர்.

ஆயினும், பெரிய அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளுக்கு இது பொறுக்கவில்லை. அடிப் பொடிகளுடன் சங்கரலிங்கத்தின் வீட்டுக்கே மிரட்டுவதற்காக வந்துவிட்டனர்.  ஆனால், அவர்களே அதிர்ச்சியடையும் வகையில், சங்கரலிங்கத்தின் வீட்டின் வாசலில், இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கையில் கேமரா ஃபோனுடன் காவலுக்கு இருந்தனர்.  எனவே அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் முறைத்துக்கொண்டே திரும்பினர்.

ரகசியமாக பணம் விநியோகிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சங்கரலிங்கத்தின் ஏற்பாட்டின் படி, ஒவ்வொரு தெரு முனையிலும் மூன்று இளைஞர்கள் ஷிப்ட் வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் கையில் கேமரா ஃபோனுடன் காவலாக நின்றனர்.  வீடுகளுக்கு வரும் கூரியர் பணியாளர்களும், பால்காரர்களும் கண்காணிக்கப் பட்டனர்.  இரவு நேரங்களில் வீடுகளுக்கு தேவையின்றி ஆட்கள் செல்லுவதும் கண்காணிக்கப் பட்டது.  பொது இடங்களிலும், கட்சி அலுவலகங்களுக்கும் மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப் பட்டது.  ஆனால், அவர்களே ஆச்சரியப்படும் வகையில், மக்கள் யாரும் பணம் வாங்க கட்சி அலுவலகங்களுக்கு செல்ல விரும்பாமல் தத்தம் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.  சங்கரலிங்கம் தயாரித்திருந்த நோட்டீஸ் அவர்கள் மனதில் கூச்சத்தையும், நிச்சயமான மாற்றத்தையும் உருவாக்கியிருந்தது.

இத்தனை ஏற்பாடுகளையும் மீறி, வீடுகளுக்குப் பணம் தர சில கட்சி நிர்வாகிகள் முயன்றபோது, ஒவ்வொரு தெரு முனையிலும் ராப்பகலாக நின்றிருந்த இளைஞர்களால் தடுக்கப் பட்டனர். அவர்களிடம் சிலர் விவாதம் செய்தபோது, மாவட்டத் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்குத் தெரிவிக்கப் படும் என்று இளைஞர்களால் அறிவுருத்தப் பட்டனர்.  தீவிரமாக மிரட்டிய ஒரு கட்சி நிர்வாகி பற்றி, தேர்தல் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர் அந்த ஊருக்கு வந்து விசாரணை நடத்தி எச்சரித்துவிட்டுச் சென்றார்.

அவர் அதோடு நில்லாமல், அந்த ஊரில் சங்கரலிங்கத்தின் முயற்சியால், ஓட்டுக்குப் பணம் தருவதைத் தடுக்க எடுக்கப் பட்டிருந்த மிகச் சிறப்பான நடவடிக்கைகளை பற்றி தன் மேலதிகாரிகளிடம் தெரிவிக்க, அதை அறிந்த ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் அந்த ஊரில் குவிந்து,  அந்த ஊரின் சிறப்பான ஓட்டுக்கான லஞ்சத் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக செய்திகளை தங்கள் அலுவலகங்களுக்கு அனுப்பினர்.  அனைத்து ஊடகங்களிலும் இது முக்கியமான செய்தியாகிப் போக, அந்த அத்திப்பட்டு கிராமம் நாடு முழுதும் ஒரே நாளில் புகழ் பெற்றுப் போனது.

இதை அறிந்த மேலும் பல ஊர்களிலும், இளைஞர்கள் ஓட்டுக்கு லஞ்சம் தருவதைத் தடுக்க ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினர்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்ததால், கண்காணிப்புகள் அத்திப்பட்டு கிராமம் முழுவதும் தீவிரப் படுத்தப் பட்டன. கடைசி இரண்டு நாட்களில் வீடுகளுக்கு வரும் நபர்கள் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டனர்.  தேர்தலுக்கு முதல் நாள் இரவு இளைஞர்களும், சுய உதவிக்குழு மகளிரும் தெருக்களில் நடமாடிக்கொண்டே கண்காணித்தனர்.

ரேஷன் கடையில் நின்றிருந்த மக்களிடம் ஒருவர் கவருக்குள் பணம் வைத்து கொடுக்க முயன்றபோது, அவர்களே வெட்கப் படும் வகையில் மக்கள் அந்தக் கவர்களை கொடுத்தவரின் முகத்திலேயே தூக்கி எறிந்தனர். சங்கரலிங்கத்துக்கு மக்களால் தொலைபேசியில் தகவல் தரப்பட, பத்து இளைஞர்களுடன் அவர் வந்து பணம் தர முயன்றவர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

இந்தத் திறமையாகத் திட்டமிடப் பட்ட தீவிரமான நடவடிக்கையால், எந்தக் கட்சியாலுமே, யாருக்கும் ஓட்டுக்காகப் பணம் தர முடியாமல் போனது.  ஓட்டுக்குப் பணம் தர முயன்றவர்களை மக்களே கேலியாகவும், கோபமாகவும் பார்த்ததுடன், தகவல்களும் பரிமாறிக்கொள்ளப் பட்டு, ஆட்கள் கூடியதால், கட்சிகளின் நிர்வாகிகள் அதிர்ந்தனர்.

மக்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர்ந்துகொண்ட கட்சிகளின் நிர்வாகிகள், பின்னர் தாமாகவே பணம் கொடுக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொண்டனர்.

தேர்தலும் வந்தது.  மக்கள் சாரை சாரையாகச் சென்று வாக்களித்தனர்.  வழக்கத்தை விடவும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்ததை சங்கரலிங்கமும், அவருக்குப் உதவி புரிந்த இளைஞர் மன்ற உருப்பினர்களும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களும் கவனித்தனர்.

அவர்களின் முகங்களில் அளவு கடந்த நிம்மதியும், பெருமையும் தெரிந்தது.  ஓரு ஜனநாயக அசிங்கத்தைத் தடுத்து நிறுத்திவிட்டோம் என்ற நிம்மதி அவர்களிடம் தெரிந்தது.

வாக்களித்த மக்களின் முகங்களிலும் பெருமிதமும், தவறு செய்யாததால் கிடைத்த கம்பீரமும் தெரிந்தது.  தங்களது கிராமம் நாட்டுக்கே ஒரு உதாரணமாக, நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டியிருக்கிறது என்ற பெருமை அவர்களிடம் தெரிந்தது.

மத்திய தேர்தல் ஆணையர்களும், மாநிலத் தேர்தல் ஆணையரும் அத்திப்பட்டு கிராமத்துக்கு வருகை தந்து மக்களிடையே பொதுக்கூட்டங்களில் பேசி அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

தேர்தலில் ஓட்டுக்குப் பணம் தருவதைத் தடுக்க எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தினசரி நேரடியாகப் படம் பிடிக்கப்பட்டு, டாக்குமென்டரி படமாக தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு, அனைத்து தொலைக்காட்சிகளிலும், சினிமா தியேட்டர்களிலும் ஒளிபரப்பப்பட்டன.

சங்கரலிங்கத்தின் முயற்சிகள் நாடு முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒரு சில ஆயிரம் தேர்தல் ஆணைய ஊழியர்களல் மட்டுமே கோடிக்கணக்கான மக்களைக் கண்காணித்து ஓட்டுக்குப் பணம் தருவதைத் தடுப்பது என்பது நடைமுரையில் இயலாத காரியம்.  மக்கள் மனம் மாறவேண்டும்.  சங்கரலிங்கத்தைப் போல ஒவ்வொரு வார்டிலும் ஒருவர் முயற்சி செய்தால் கூட போதும்.  இந்தச் சீரழிவுகளைத் தடுத்துவிட முடியும்.  இத்தகைய முயற்சிகள் நாடு முழுவதும் மக்களாலேயே எடுக்கப்பட்டால், ஓட்டுக்குப் பணம் தரும் அசிங்கமான கலாசாரம் நிச்சயமாக ஒழியும்.  ஓட்டுக்குப் பணம் தர வருபவர்களை ஏளனமாகப் பார்க்கும் வழக்கம் உருவாகும்.

மத்திய அரசின் சிறப்புப் பரிசாக அத்திப்பட்டு கிராமம், மாதிரி கிராமமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அங்கே செயல்படுத்தப்பட்டன.  அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் கட்டித்தரப்பட்டன. தெருக்கள் சிமென்ட் சாலைகளாயின. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு தரப்பட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்ட ஐநூறு இளைஞர்களுக்கு, தொழில் தொடங்க சிறப்புக் கடன் வழங்கப்பட்டது.  அத்திப்பட்டு கிராமத்தில் ஒரு உணவு பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது!

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள் தாமாகவே அதை நிறுத்திக்கொள்ளும் நிலை அடுத்த தேர்தலில் அத்திப்பட்டு கிராமத்தில் இருக்கும்.  ஏனென்றால், அந்த மக்கள் மாறிவிட்டார்கள்.  மேலும், நேர்மையாக செயல்படுவதற்கான பரிசாக, அந்த கிராமமே இப்போது ஒரு முன்மாதிரி கிராமமாக, அரசின் செல்லப் பிள்ளையாக ஆகிவிட்டது!

இப்போதெல்லாம் சங்கரலிங்கத்தின் மனைவி, அவர் பொதுக் காரியங்களுக்காகக் கிளம்பும் போது தடுப்பதில்லை.  அவளின் கணவர் செய்திருப்பது சாதாரண காரியமா என்ன?

கருத்துகள்

POPULAR IN THIS SITE